சிரியாவில் வான் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு..

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

அலெப்போவிற்கு அருகில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணம்தான் தனது அடுத்த இலக்கு என அதிபர் பஷார் அல் ஆசாத் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in