சிரியா ஆயுதக்கிடங்கில் தாக்குதல்: 39 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் வடமேற்கு மாகாணமான இட்லிபில், ஒரு கட்டத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்மடா நகரில் இருக்கும் இந்த கட்டடம் ஆயுத கடத்தல்காரர்களுக்கு சொந்தமான கிடங்காக இருந்ததாக கூறப்படுகிறது.

சிரியன் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் எனும் மனித உரிமைகள் அமைப்பு மேலும் பலரைக் காணவில்லை என்கிறது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கடைசி பகுதி இட்லிப். சிரியாவின் ஆயுத படையினரின் அடுத்த இலக்காக இப்பகுதி இருக்கும் என கருதப்பட்டது.

ரஷ்யா மற்றும் இரான் ஆதரவு பெற்றுள்ள சிரியா அரசானது கடந்த சில மாதங்களில் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிகாதிகள் குழுக்களுக்கு எதிராக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுகிழமையன்று, சர்மடாவில் உள்ள மீட்புப் படையினர் இடிந்த கட்டடத்தின் குவியல்களை அப்புறப்படுத்தவும் சிக்கிக்கொண்டவர்களை வெளியே எடுக்க உதவும் பணியை மேற்கொள்கின்றனர் என ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சிரியா மேப்

இதற்கிடையில் பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட சிரியன் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் மேலும் பலரை காணவில்லை என்கிறது. இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டடத்தில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் சிரியாவின் மத்திய ஹாம்ஸ் மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. -BBC_Tamil