அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்க என அமைச்சரவை ஆணை

2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்து திருத்துமாறு அமைச்சரவை இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுக்கு ஆணையிட்டுள்ளது.

மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முக்கியப் பங்காற்றியுள்ளதாக இன்று மாலை பின்னேரத்தில் பல சீன மொழி நாளேடுகள் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த மசோதா அமைச்சரவைக் கொண்டு செல்லப்பட்ட போது நஜிப் வெளிநாட்டில் இருந்ததால் அந்த விவகாரம் மீது அவர் எதுவும் கருத்துத் தெரிவிக்க இயலாமல் போய் விட்டது என்றும் கூறப்பட்டது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நஜிப் சில யோசனைகளைத் தெரிவித்ததாகவும் அவற்றின் அடிப்படையில் வேண்டியதைச் செய்யுமாறு அவர் நஸ்ரிக்கு ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அந்த மசோதா மீது விவாதம் நிகழ்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் அந்த மசோதா குழு நிலையை அடையும் போது திருத்தங்கள் செய்ய முடியும் என ஒரு வட்டாரம் குறிப்பிட்டது.

ஏற்பாட்டாளர்கள் கூட்டம் நடத்துவதற்கு 30 நாட்கள் முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை மறு ஆய்வு செய்யப்படும் விஷயங்களில் அடங்கும்.

அது பத்து நாட்களாகக் குறைக்கப்பட வேண்டும் என யோசனை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

என்றாலும் சாலை ஆர்ப்பாட்டங்களை அனுமதிப்பது இல்லை என்பதில் அமைச்சரவை இன்னும் பிடிவாதமாக இருப்பதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

அந்த மசோதாவை வழக்குரைஞர் மன்றம், மலேசிய மனித உரிமை ஆணையம், சிவில் சமூக அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் ஆகியவை கடுமையாக எதிர்த்துள்ளன.