ஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 9-ந் தேதி இரவில் தலீபான்கள் களத்தில் இறங்கினர். அவர்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் படையினர் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை தொடுத்தனர்.

இதில் இரு தரப்புக்கும் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. கஜினி நகரம் தங்கள் வசம் இருப்பதாக தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் பர்யாப் மாகாணம் கோர்மாச் மாவட்டத்தில் உள்ள செனாயீகா ராணுவ தளத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு 2 நாட்களாக ராணுவவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கடுமையான சண்டை நடந்தது. இதில் ராணுவவீரர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பிலும் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவ தளத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 40 ராணுவவீரர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர்.

இது குறித்து மாகாண சபையின் தலைவர் முகமது தாகீர் ரஹ்மானி கூறுகையில், ‘‘எங்களால் ராணுவ தளத்துக்குள் நுழைய முடியவில்லை. ராணுவ தளம் முழுவதும் தலீபான்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’’ என்றார்.

-dailythanthi.com