ஜொகூர் பிகேஆர் கூட்டங்களுக்குக்கான அனுமதி ரத்தால் பிரச்னை

ஜொகூரில் அடுத்த சில தினங்களுக்கு இரவில் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்துவதற்காக பிகேஆர் வரைந்திருந்தத் திட்டம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அங்கு  பிகேஆர் அதன் தேசிய மாநாட்டை நடத்தவிருக்கிறது.

இன்றிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கான போலீஸ் அனுமதிகள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.

ஒவ்வொரு இரவும் 14 தொகுதிகளில் 15 லிருந்து 20 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான போலீஸ் அனுமதிகள் சில நாள்களுக்கு முன்பு பெறப்பட்டன. ஆனால், அவை நேற்றிரவு ரத்து செய்யப்பட்டன”, என்று அவர் கட்சியின் இளைஞர் மற்றும் மாதர் பிரிவுகளின் கூட்டத்தை புலாய் ஸ்பிரிங் ரிசோர்ட்டில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கான உத்தரவுகளை ஜொகூர் மாநில அரசு பிறப்பித்திருப்பதாக தமக்குத் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளுக்காக கட்டப்பட்டிருந்த கட்சியின் கொடிகளையும் இதர அலங்காரக் கொடிகளையும் அகற்றியுள்ளனர். ஏன் என்று தெரியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“இருந்தாலும், நிகழ்ச்சிகளை நடத்துவோம். இப்போது நாங்கள் இன்னும் தீவிரமாக இருக்கிறோம்”, என்றாரவர்.

போலீஸ் மறுப்பு

அனைத்து பிகேஆர் நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை மாநில போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷ்ரீப் தொடர்பு கொண்டபோது மறுத்தார்.

எடுத்துக்காட்டு: “ஜொகூர் செலத்தான், தாமான் டாயா செராமாவுக்கான அனுமதி இன்னும் இருக்கிறது”, என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“பாதுகாப்பு காரணங்களுக்காக” ஒரே ஒரு மனு மட்டுமே நிராகரிக்கப்பட்டது என்றாரவர்.

“அஸ்மின் என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதையும் எந்த அதிகாரி அதனைச் செய்தார் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம்”, என்றாரவர்.

TAGS: