யூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்

நாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில், மூன்றாண்டு காலத்தை கிரீஸ்வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரீஸுக்கு தடை ஏதும் தற்போது இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிரீஸுக்கு அதன் நிதி பிரச்சனையை சமாளிக்க, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு 61.9 பில்லியன் யூரோ நிதியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் நாட்டின் சரிவடைந்த பொருளாதாரத்தை புனரமைக்கவும், வங்கிகளின் மூலதனத்தை மறு சீரமைக்கவும் அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியோடு, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கிரீஸுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 260 பில்லியன் யூரோவுக்கும் அதிகம்.

கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ்கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ்

இதுவே உலக அளவில் ஒரு நாட்டுக்கு அதன் கடன் மற்றும் நிதி பிரச்சனையை சமாளிக்க வழங்கப்பட்ட அதிகபட்ச நீதியாகும்.

கிரீஸில் மூடப்பட்ட வங்கிகள்

கடந்த 2014-15 காலகட்டத்தில் கிரேக்க நாட்டில் வங்கிகள் நிதி பற்றாக்குறையால் பல நாட்களுக்கு மூடப்பட்டது.

அந்த காலகட்டத்தில் கிரீஸின் அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவையடுத்து, அந்நாட்டு வங்கிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ஏடிஎம் எந்திரங்களிலிருந்து பணத்தை எடுப்பவர்கள், ஒரு நாளைக்கு 60 யூரோக்களுக்கு மேல் எடுக்க முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எடிஎம் எந்திர மையங்களுக்கு முன்பு குவிந்த மக்கள்

இந்த அறிவிப்புகளின் காரணமாக, ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

சர்வதேச நாணய நிதியம் உள்பட பல அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றிருக்கும் கிரேக்கம், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கலை சந்தித்தது.

ஏதென்ஸ் நகரில் எடிஎம் எந்திர மையங்களுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்த செய்திகள் மற்றும் மக்களிடம் தென்பட்ட கவலை மற்றும் கோபம் ஆகியவை கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை மற்றும் ஸ்திரமின்மையை வெளிக்காட்டுவதாக அமைந்தது.

நாட்டில் ஏற்பட்ட நிதி மற்றும் கடன் மற்றும் பிரச்சனையை சமாளிக்க மக்களின் ஆதரவை பெறாத பல சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் அரசு எடுத்தது.

இந்த நடவடிக்கைகள் அந்நாடு பெற்ற கடன்கள் தொடர்பான நிபந்தனைகளில் உள்ளடங்கும்.

இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேம்பட்டது. தற்போது யூரோ வலய திட்டத்தில் இருந்து அந்நாடு வெளியேறியது ஆக்கபூர்வமான ஒன்றாக கருதப்படுகிறது. -BBC_Tamil