சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசைப் பின்பற்றி மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று கருத்துரைத்துள்ள மந்திரி புசார் காலிட் இப்ராஹிமை சாடியுள்ள சிலாங்கூர் அம்னோவின் தொடர்புக்குழு துணைத் தலைவர் நோ ஒமார் மற்றும் அதன் தேசிய உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரின் கூற்று மிக வேடிகையாகவுள்ளது. மாற்றுக் கருத்துகளை சற்றும் ஜீரணிக்க முடியாமல் அம்னோ தவிப்பதையே அவர்களின் வெதும்பல்கள் காட்டுகின்றன என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுபினர் சேவியர் ஜெயக்குமார்.
கலாச்சார அதிர்ச்சியில் அம்னோ
கெஅடிலான் கட்சியும், பாக்காத்தான் ராயாட் மக்கள் முன்னணியும் அம்னோவின் உட்பிரிவுகள் அல்ல. இவர்களின் நாட்டமைக்கும், கட்டளைக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் தாளம் போடுவதற்கு. அது பாரிசானின் உறுப்புக் கட்சியுமல்ல இவர்கள் கட்டளைக்கு அடிப்பணிந்து நடக்க என்ற உண்மையை அம்னோ தலைவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் நினைவுறுத்தினார்.
நீண்ட நாட்களாக இந்நாட்டின் ஏகபோக எஜமானராக தங்களைக் கருதிக் கொண்டு மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கோ, மாற்றுக் கருத்துகளுக்கோ சற்றும் மரியாதை செலுத்தத் தெரியாமல், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவமின்றி, ஒரு கலாச்சார அதிர்ச்சியில் அம்னோ தலைவர்கள் இப்பொழுது சிக்கிக் கொண்டுள்ளதை அவர்களின் செயல்கள் காட்டுகின்றன என்று அவர் இடித்துரைத்தார்.
உலகமறிந்த ஊழல்கள்
நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து மாநில தேர்தல்களும் நடத்த தவறினால் நாட்டுக்கு பெரிய பொருளாதார இழப்பு போலவும் மக்களுக்கு பெரிய பாதகத்தை பாக்காத்தான் செய்து விட்டதைப் போன்று பீடிகை போடுகிறார்கள்.
இவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் சிரமங்கள் மீதும் உள்ள அக்கறை என்ன என்பது நாட்டு மக்கள் அறிந்ததுதானே! ஊழலுக்கும், ஊதாரித்தனத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உலக அரங்கில் மலேசியா அவப்பெயர் எடுக்கக் காரணமான பாரிசான் அமைச்சர்கள் மக்கள் நலன் மற்றும் சிக்கனம் பற்றி பேசுவது ஒரு அறுவருப்பான நகைச்சுவையாகும் என்றாரவர்.
“இப்படி இடையிடையே நாடாளுமன்ற தேர்தலை அம்னோவின் விருப்பத்திற்கு நடத்தும்போது, அதனால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள் மட்டும் ஏன் அம்னோ தலைவர்களின் அறிவுக்கு எட்டவில்லை?
“ஆட்சி செய்யவும், மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தவும் ஒரு தவனையான ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ள போதிலும், திடீரென தேர்தல் நடத்தி மேம்பாட்டு திட்டங்களைத் திசை மாற்றுவதும், மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பதும் ஒரு பொறுப்புணர்வுள்ள செயலா?”, என்று சேவியர் கேட்கிறார்.
“மக்களுக்கான பல திட்டங்களை ஒரு பட்ஜெட்டில் அறிவித்து அதனை நிறைவேற்றிய பின்னர் மக்களிடம் சாதனைகளைக் காண்பித்து வாக்கு கேட்பதுத்தான் பொறுப்புள்ள ஜனநாயக அம்சம். அதுதான் பொறுப்புள்ள அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய காரியம்.
“ஆனால் மக்களின் வரிப்பணத்தில், பல அரசாங்க அதிகாரிகளின் நேரத்தை செலவழித்து வரவு செலவு பட்ஜெட்டை தயாரித்து, மேம்பாட்டு திட்டங்களையும் தயார் செய்துவிட்டு, அதனைச் செயல்படுத்த இம்மியளவும் முயற்சிக்காமல் மக்களை தேர்தலுக்கு கட்டாயப் படுத்துவது பொறுப்பற்றவர்களின் செயல் என்பதால், பாக்காத்தான் அதற்கு உடன் பட மறுப்பதில் என்ன தவறு?”, என்று வினவுகிறார் சேவியர்.
திடீர் தேர்தல் ஏன்?
“நாட்டு மக்களின் அரசியல் ஞானத்தை குறைத்து எடைபோட்டு, மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிக் கொண்டுள்ள பாரிசான் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை வைத்துக் கொள்ளட்டும், ஆனால் மக்களை மதித்து, அவர்களின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படும் பக்காத்தான் மாநில அரசுகள் அது போன்ற அறிவற்ற செயல்களில் ஈடுப்படாது என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை”, என்பதை சேவியர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இந்நாட்டு அரசியல் சட்டம் மற்றும் மக்களின் ஆணைக்கேற்ப ஒரு தவணையான ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையல்லவா தேர்தல்களை நடத்த வேண்டும்? இன்னும் நான்கு ஆண்டுகளைக் கூட பூர்த்தி செய்யாத ஒரு நிலையில், நாடு பெரிய பொருளாதார சிக்களையோ அரசியல் நிலைத்தன்மையற்ற நிலையையோ எதிர்கொண்டிராத இவ்வேளையில், பிரதமர் திடீர் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் வினவினார்.
“அப்படி ஒரு தேர்தலை நடத்துவதற்குத் தகுந்த தேதியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் எதிர்பார்த்தால் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் அவர் கலந்தாலோசிக்க வேண்டும்.
“அம்னோ இதற்கு முன் கூறி வந்துள்ளதைப் போன்று நாட்டில் தேர்தல் நடத்துவது பிதமரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட காரியமல்ல. இது நாட்டையும், நாட்டு மக்களின் மேம்பாட்டையும், வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு செயலாக இருப்பதால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப குறித்த காலத்தில் போதிய கால அவகாசம் கொடுத்தே தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற கலாச்சாரத்தை இனியாவது அம்னோவும், பாரிசானும் பின்பற்ற கற்றுக் கொள்ளட்டும்”, என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.