பொருளாதார தடைகளிற்கு அப்பால் ஈரான் மீது மேலும் கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகிக்கலாம் என ஜனாதிபதி டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டொன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுடன் யுத்தத்தில் ஈடுபட்டால் அமெரிக்கா அதற்காக பெரும் விலையை செலுத்தவேண்டியிருக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்தொல்லா அலி கமேனிற்கு நெருக்கமான மூத்த மதகுருவொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைத் திட்டத்தை கைவிடவேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் தொடர்ந்தும் ஏவுகணை திட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் இந்த நாட்டிற்கு தீங்கு விளைவித்தால் அவர்களிற்கும் பிராந்தியத்தில் அவர்களுடைய நேசநாடான இஸ்ரேலும் இலக்குவைக்கப்படும் என்பது அவர்களிற்கு தெரியும் என ஹகமட் கட்டாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த மாதம் ஈரானின் கார் வர்த்தகம் மற்றும் தங்க தொழில்துறையை மையமாக வைத்து தடைகளை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈரானுடனான ஒபாமா காலத்து அணுவாயுத உடன்படிக்கையை டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்து மீண்டும் தடைகளை விதித்த பின்னர் இரு நாடுகளும் கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் நவம்பர் மாதம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-athirvu.in