பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் துயர்மிகு கதை

ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்?

வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தம் வலி மிகுந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

பதினான்கு வயதில் கடத்தப்பட்டேன்

தமது 14 வயதில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட அஷ்வக், நூறு டாலர் பணத்திற்கு அபு ஹுமம் என்பவரிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டும் அல்ல அவருடன் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் மூன்று மாத போராட்டத்திற்கு பின் அங்கிருந்து தப்பி ஜெர்மனி வந்திருக்கிறார்.

ஆனால், ஜெர்மன் வீதியில் ஒரு நாள் இரவு மீண்டும் அபு ஹுமமை சந்தித்து இருக்கிறார்.

நான் துயர்மிகு நினைவுகளிலிருந்து தப்ப நினைத்தேன். ஆனால், அந்த துயரத்திற்கு யார் காரணமோ, அவரை ஜெர்மனில் சந்தித்தேன்.

வலி துரத்தும் வாழ்வு

“பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கார் என் அருகே நின்றது. அந்த காரில் முன் இருக்கையில் அபு ஹுமம் அமர்ந்து இருந்தார். என்னிடம் ஜெர்மனியில் பேச தொடங்கினார், ‘நீ அஷ்வக் தானே என்றார் ? அச்சத்தில் என் உடல் நடுங்க தொடங்கிவிட்டது. ‘இல்லை… நீ யார் என்றேன்?. ஆனால், அவர், ‘உறுதியாக நீ தான் அஷ்வக். நான் அபு’ என்றார்” என்று பிபிசியிடம் அந்த நிகழ்வை விளக்குகிறார்.

மேலும் அவர், “பின் என்னிடம் அரபியில் உரையாட தொடங்கினார். நான் எங்கே வசிக்கிறேன், யாருடன் இருக்கிறேன் என அனைத்தும் அவருக்கு தெரியும் என்றார்.”

பலர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டிருக்கிறார்கள்

“இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு ஜெர்மனியில் நிகழும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் நாட்டைவிட்டு, என் பெற்றோரைவிட்டு என் துயரத்தை மறக்க… கடக்க ஜெர்மனி வந்தேன். ஆனால், அங்கும்அந்த துயரம் துரத்தியது” என்றார்

பின் இந்த நிகழ்வை அஷ்வக் போலீஸிடம் கூறியதாக ஜெர்மன் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். இராக்கில் தமக்கு ஏற்பட்ட அச்சமூட்டும் நிகழ்வையும் கூறி இருக்கிறார்.

அபு தன்னை சந்தித்த இடம் அருகே இருக்கும் பல்பொருள் அங்காடியின் சிசிடிவி கேமிரா வையும் போலீஸிடம் ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அஷ்வக்.

“நான் இது தொடர்பான நடவடிக்கைக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை”

ஆஸ்திரேலிய முயற்சி

அபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்த அஷ்வக், அங்கிருந்து மீண்டும் வடக்கு இராக் வந்திருக்கிறார்.

பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை

மீண்டும் கல்வியை தொடர வேண்டும் என்பது அஷ்வக்கின் விருப்பம். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் கடத்தப்படுவோம் என்ற அச்சம் அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் இருக்கிறது. அதனால், அவர் இப்போது இருக்கும் குர்திஸ்தான் பகுதியிலிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள்.

ஆனால், ஜெர்மனி செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள். -BBC_Tamil