முக்கிய வர்த்தக அம்சங்களில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.
வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை விரைந்து முடிக்க அழுத்தம் அதிகரித்திருப்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தக ரீதியான இந்த வெளிப்படையான முன்னேற்றம் குறித்து திங்கள்கிழமையன்று அறிவித்தார்.
இறுதியாக இந்த ஒப்பந்தம் கனடாவின் சம்மதம் மற்றும் கையெழுத்துடன் முழுமை பெறும்.
1 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருடாந்திர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
1994 ஒப்பந்தம் தொடர்பான மறுபேச்சுவார்த்தைக்கு பலமுறைகள் வலியுறுத்திய டிரம்ப், அமெரிக்காவில் உற்பத்தி ரீதியிலான பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இன்று வெளியிடப்பட்ட தொலைக்காட்சி பேட்டியில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் வர்த்தக ரீதியிலான பொதுவான விதிகளை ஒப்புக்கொண்டு நம்பமுடியாத வகையில் அமைந்த இந்த ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்த குறைந்த தகவல்களே உள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான இறுதி பயன்கள் மற்றும் விளைவுகள் குறித்து தெளிவில்லாத நிலையே உள்ளது. -BBC_Tamil