ஐ.நாவின் பாலத்தீனிய அகதிகள் முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை “சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக” அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“அமெரிக்க நிர்வாகம் இந்த விஷயத்தை கவனமாக மறுஆய்வு செய்தது. இதற்கு மேலும் ஐ.நாவின் மீட்புப் பணி முகமைக்கு நிதியுதவி அளிக்க முடியாது” என செய்தி தொடர்பாளர் ஹீதர் நவட் தெரிவித்துள்ளார்.
பாலத்தீனிய அதிபர் மகமூத் அபாஸின் செய்தி தொடர்பாளர், “இது பாலத்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமையின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் கடுமையாக எதிர்த்துள்ளார்.
- மணமகளாக நடித்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஹாங்காங் பெண்
- கருணாநிதி புகழஞ்சலி கூட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சியா?
“எங்கள் முகமையின், பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் அவசரகால உதவி திட்டங்கள் ஆகியவை சரிசெய்யமுடியாத அளவுக்கு தவறாக செயல்படுவதாக கூறியதை கடுமையாக மறுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
எப்போது தொடங்கப்பட்டது இந்த முகமை?
1948ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை காக்க அமைக்கப்பட்டதுதான் இந்த முகமை.
மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள 5 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களுக்கு சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள் ஆகியவற்றை இந்த முகமை அளித்து வருகிறது.
இந்த முகமைக்கு அமெரிக்கா இதுவரை மிகப்பெரிய நிதியுதவியை அளித்து வரும் தனி ஒரு நாடாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் 368 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடனையாக வழங்கியுள்ளது அமெரிக்கா.
அந்த பகுதியில் முகமையின் 30 சதவீத நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது.
டிரம்ப் நிர்வாகம் ஜனவரி மாதம் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி செய்வதாக உறுதி அளித்தது. 65 மில்லியன் டாலர்கள் மறுஆய்வுக்கு பிறகு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த 65மில்லியன் டாலர்கள் தற்போது ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியன்று ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், இந்த முகமைக்கு தங்களது நிதியுதவியை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முகமை வலு இழப்பது அடுத்தடுத்து பல நிகழ்வுகளுக்கு வித்திடும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஜனவரியில் தங்களுக்கு தேவையான நிதி குறித்து உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தது இந்த முகமை. அச்சமயத்தில் இஸ்ரேலில் உள்ள சிலர் முகமை செயலிழந்து போனால் பிராந்திய ஸ்திரமின்மைக்கு வித்திடும் என்றும் அந்த பிராந்தியத்தில் தீவிரவாதத்தை அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவின் நிலை?
“அந்த பிராந்தியத்துக்கு அதிகப்படியான நிதியுதவி அளித்த போதிலும் அதற்கான மரியாதையும் பாராட்டுகளும் அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை” என தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனவரி மாதம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த பாலத்தீனியர்கள் விரும்பவில்லை என்று டிரம்ப் கருதுவதால் அவர்களுக்கு அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்படும் என அவர் அச்சுறுத்தினார்.
இந்நிலையில், முகமையின் நிதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பள்ளிகள், சுகாதார மையங்கள் மூட வேண்டிய சூழ்நிலைக்கு செல்லாமல் இருக்க 60 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் 2018ஆம் ஆண்டு உறுதியளித்தது என அமெரிக்க நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் நவட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிதியுதவி சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும், முகமையின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அமெரிக்கா பார்வையிட விரும்புகிறது என அவர் மேலும் கூறினார். -BBC_Tamil