அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அடுத்தடுத்து விதித்த பல்வேறு பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் வரலாறுகாணாத சரிவை சந்தித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.
நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.
ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் வாக்களித்தனர்.
மேலும் விலைவாசியையும், பொருளாதாரச் சரிவையும் முறையாக சமாளிக்க தவறிய அதிபர் ரவுகானி இதுதொடர்பாக அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், வெளிச்சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு இன்று வரலாறுகாணாத சரிவை சந்திதுள்ளது. கடந்த மே மாதத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டு பணத்தின் மதிப்பு 80 ஆயிரம் ரியால்களாக இருந்த நிலைமாறி, இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் (சுமார் 50 சதவீதம் அதிகம்) என்னும் உச்சத்தை தொட்டுள்ளது.
நிலமை இப்படியே போனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு 2 லட்சம் டாலர்களை தொடும் என அஞ்சப்படுகிறது.
-athirvu.in