இட்லிப் மாகணத்தில் வான் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டது

சிரியாவின் இட்லிப் பகுதியை இலக்கு வைத்து, செவ்வாயன்று தனது போர் விமானங்கள் குண்டுகளை வீசியதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்த எச்சரிக்கையை நிராகரித்த, சிரிய ராணுவம் அங்குள்ள பயங்கரவாதத்தின் தொடக்கத்தை அழிக்க தயாராக இருப்பதாக ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கவ் தெரிவித்தார்.

அல்-கய்தா அமைப்பு, முன்பு பயன்படுத்தி வந்த நிலைகளை இலக்கு வைத்து நான்கு விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இட்லிபில் பெரும்பான்மை பகுதிகளை வைத்திருக்கும் ஜிகாதிகளுடன் தொடர்பு கொண்ட அல் கெய்தா குழு, சிரியாவில் உள்ள ராணுவ தளவாடங்களை அச்சுறுத்தி வருவதாகவும், உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர விடாமல் தடுப்பதாகவும் பெஸ்கவ் தெரிவித்திருந்தார்.

சிரியா

கிளர்ச்சியாளர்கள் வலுவாக இருக்கும், இட்லிப்-இன் மேற்குப் பகுதியில் உள்ள, ஜிஸ்ர் அல்-ஷுஹெளர் என்ற நகரில் ரஷ்யா மற்றும் சிரியாவின் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் இந்த கடைசிப் பகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் சிரியா அரசு மிகவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிரியா

சிரியாவில் போராளிகள் வசமுள்ள கடைசி பகுதியான இந்த பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சிரியா அரசுப்படைகள் திட்டமிட்டு வருகின்றன.

சிரியா அரசுப்படைகளின் இந்த பதில் நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கைநிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகும் என்று ஐ.நா. அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. -BBC_Tamil