கிம் ஜாங் அன்னை பாராட்டி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்

வாஷிங்டன் : வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.

அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.

நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர். அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.

இந்நிலையில், ஏவுகணைகள் இல்லாமல் ராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறாமல் ராணுவ அணி வகுப்பு நடத்தியதற்கு எனது பாராட்டுகள். இது வடகொரியாவின் மிகப்பெரிய நேர்மறையான நடவடிக்கையாகும். நன்றி கிம் ஜாங் அன். எங்களுக்குள் மோதல் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களின் எண்ணம் தவறானது என நாங்கள் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

-https://athirvu.in