குடியேறிகள் நெருக்கடி: பலருக்கும் கல்லறையாகும் லிபியாவின் கடல்

இந்த மாத தொடக்கத்தில் லிபிய கடலில் படகு உடைந்து மூழ்கியதில் 100க்கு மேலானோர் இறந்தனர் என உதவி முகமை ஒன்று தெரிவிக்கிறது.

செப்டம்பர் முதல் நாள் பயணத்தை தொடங்கிய 2 ரப்பர் படகுகளில் ஒன்று பஞ்சராகி, முழ்கிவிட்டதாக ‘மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டீர்ஸ்’ (எம்எஸ்ஃஎப்) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உயிர் தப்பிய 276 பேர் தலைநகர் திரிபோலியின் தென்கிழக்கில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோம்ஸ் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

‘தன்னிச்சையான காவல் தடுப்பில்’ அவர்கள் இப்போது உள்ளதாக எம்எஸ்ஃஎப் தெரிவிக்கிறது.

கர்பிணி பெண்கள், குழந்தைகள், மழலைகள் உள்பட உயிர் தப்பியவர்களுக்கு நிமோனியா மற்றும் சிந்திய எரிபொருளில் இருந்து ஏற்பட்ட தீக்காயங்களுக்கு எம்எஸ்ஃஎப் சிகிச்சை அளித்து வருகிறது.

வரைபடம்

மத்தியதரைக்கடலை கடந்து செல்லும் முயற்சியில் 1,500க்கு மேற்பட்ட குடியேறிகள் இந்த ஆண்டு இறந்துள்ளதாக குடியேற்றத்திற்கான சர்வதேச நிறுவனம் கூறியுள்ளது.

லிபியாவில் இருந்து செல்லும் குடியேறிகள் சென்றடையும் முனையமான இத்தாலி, குடியேறிகளின் கப்பல்கள் நுழைவதற்கு சமீபத்தில் அனுமதி மறுக்கத் தொடங்கினாலும், பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய தரைக்கடலை கடந்து செல்வோரின் எண்ணிக்கை 2015ம் ஆண்டு அதிகபட்சம் பத்து லட்சத்துக்கு மேற்பட்டதாக இருந்து தற்போது குறைந்துள்ளது. ஆனால், இந்த பயணம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும்.

சிலரின் இறப்புக்களே தெரிய வருகின்றன. ஐரோப்பாவுக்கு வந்து சேர்வோரைவிட அதிக சதவீத மக்கள் இறந்துவிடுகின்றனர்.

லிபியாவிற்கு இப்போது திரும்பி வருகின்ற அதிகமானோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. 2014-2015ம் ஆண்டுகளில் தொலைவு குறைந்த வழியான துருக்கி மற்றும் கிரேக்கத்திற்கும் இடையிலான கடல் வழியில் இருந்து, அதிக தொலைவானதும், அதிக ஆபத்து உடையதுமான இத்தாலி, லிபியாவுக்கு இடையிலான கடல்வழிப்பாதைக்கு மாறியதை வைத்து இந்த எண்ணிக்கை அதிகரிப்பை விளக்கலாம்.

வரைபடம்

சஹாராவுக்கு தெற்கிலுள்ள நாடுகளில் பணயத்தொகை அல்லது வட ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக விற்கப்பட குடியேறிகள் கடத்தப்படுவதாக கடந்த ஆண்டு எழுந்த செய்திகளால் லிபியாவிலுள்ள குடியேறிகள் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன.

2011ம் ஆண்டு லிபியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த தலைவர் மௌமார் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னர், இந்த நாட்டில் ஸ்திரமில்லா நிலையே காணப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திரிபோலியில் வெடித்த கடும் மோதல்களுக்கு பின்னர், தடுப்பு முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 10ம் தேதி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது துப்பாக்கித்தாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். -BBC_Tamil