ரஷ்ய முன்னாள் உளவாளி, மகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அதிபர் புதின் புதிய தகவல்

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நச்சு ரசாயன தாக்குல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரஷ்யர்களும் சிவிலியன்கள் என்றும், கிரிமினல்கள் அல்ல என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகிறார்.

அந்த சந்தேக நபர்களின் பெயர்கள் அலெக்ஸாண்டர் பெட்ரோவ் மற்றும் ருஷ்லன் போஷிரோவ் என்றும், இருவரும் ரஷ்ய ராணுவ புலனாய்வு முகவையின் அதிகாரிகள் என்றும் பிரிட்டன் அரசு கூறியிருக்கிறது.

அவர்கள் இருவரும் நடந்தது என்ன என்பதை விரைவில் கூறுவார்கள் என்று புதின் தெரிவித்தார். அவர்கள் யார் என்பது தெரியும். அவர்களைக் கண்டுபிடித்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் சலிஸ்பரியில் மார்ச் மாதம் ஸ்கிர்பால், அவரது மகள் யூலியா இருவரும், ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டார்கள்.

“அவர்களே நடந்த விசயங்களை அனைத்தையும் வெளிப்படையாக சொல்லிவிடுவது அனைவருக்கும் நல்லது, எதுவுமே குற்றமில்லை, விரைவில் பேசுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்” என்று புதின் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் இருவரும் விரைவில் பேசுவார்கள் என்பதை புதினின் வார்த்தைகள் உணர்த்துவதாக பிபிசி மாஸ்கோ செய்தியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் கூறுகிறார்.

நோவிசோக்
சந்தேக நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக புதின் கூறுகிறார்

“ஆனால், யாரை நாம் எதிர்பார்க்கிறோம் என்பது தான் கேள்வி, ஏனெனில் கொடுக்கப்பட்ட பெயர்கள் புனைப்பெயர்களாக இருக்குமோ என்ற சந்தேகமும் பிரிட்டனுக்கு இருக்கிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்ய பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்த அந்த இருவரும் மார்ச் இரண்டாம் தேதி மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு பயணித்திருந்ததை நிரூபிக்க போதிய சான்றுகள் இருப்பதாக ஸ்காட்லாந்து யார்ட் மற்றும் பிரிட்டனின் க்ரெளன் பிராசிக்யூசன் சர்வீஸ் கூறியுள்ளன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, சலிஸ்பரியின் வில்ட்ஷயர் நகரில் ஸ்கிரிபாலின் வீட்டின் முன்புற கதவில் நரம்பு மண்டலங்களை தாக்கும் கொடிய நச்சு வேதிப்பொருளான நோவிச்சோக்கை அவர்கள் தெளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தோராயமாக 40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும், ரஷ்யாவை விட்டு வெளியேறினாலும், பிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்று பிரிட்டன் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா, அதன் சொந்த நாட்டினரை நாடு கடத்துவதில்லை என்பதால், சந்தேக நபர்கள் இருவரையும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனின் க்ரெளன் பிராசிக்யூசன் சர்வீஸ், ரஷ்யாவிடம் கோரவில்லை.

நோவிசோக்
செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா

ஆனால், அவர்கள் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணித்தால், ஐரோப்பிய கைது வாரண்ட் பெறப்படலாம்.

சாலிஸ்பெரியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய துப்பறியும் சார்ஜென்ட் நிக் பெய்லியின் உடல்நிலையும் மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு அவர் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளைப் போலவே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

ஜுன் 30ஆம் தேதியன்று, அமெஸ்பரியில் தங்கள் வீட்டில் இருந்த டான் ஸ்டுர்கெஸ் மற்றும் சார்லி ரெளலி இருவரின் உடல்நிலையும் நோவிசோக் நச்சு தாக்குதலால் மோசமான சம்பவத்தையும் போலிசார் தொடர்புபடுத்துகின்றனர்.

இதில் ஸ்டுர்கெஸ் ஜூலை எட்டாம் தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மார்ச் இரண்டாம் தேதியன்று மாஸ்கோவில் இருந்து காட்விக் விமான நிலையத்திற்கு வந்த இருவர், லண்டனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் சிட்டி ஸ்டே ஹோட்டலில் தங்கியிருந்ததாக பிரிட்டன் போலீஸ் தெரிவிக்கிறது.

ஓய்வு பெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

நோவிசோக்

முன்னதாக, செர்கெய் ஸ்கிர்பாலுக்கு நச்சுக் கொடுத்ததன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புதின் இருப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்ட, அதற்கு கிரெம்ளின் காட்டமான பதிலடி கொடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னெப்போதையும்விட மிகவும் மோசமடைந்துள்ளது.

1970 முதல் 1980 வரை இந்த நோவிச்சோக் நச்சு வேதிப்பொருளை சோவியத் ஒன்றியம் உருவாக்கியது.

ரசாயன ஆயுத மாநாட்டு உடன்படிக்கையை 1997இல் மாஸ்கோ ஏற்றுக்கொண்டது.

நரம்புகளை சேதப்படுத்தும் நோவிசோக் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தும் திட்டங்களில் எந்தவொரு நாடும் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கவில்லை என ரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் சர்வதேச உடன்படிக்கையை செயல்படுத்தும் அமைப்பு கூறுகிறது.

தன்னிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்த சுமார் நாற்பதாயிரம் டன்கள் ரசாயன ஆயுதங்களையும் அந்நாடு அழித்துவிட்டதாக கடந்த ஆண்டு ரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் அமைப்பு சான்றிதழ் வழங்கியது.

சாலிஸ்பெரி தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்கா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றின, அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யாவும் அந்நாட்டு தூதர்களை வெளியேற உத்தவிட்டது.

நோவிசோக்

சந்தேக நபர்களின் பெயர்களை பிரிட்டன் வெளியிட்டதை அடுத்து, முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீது நடந்த கொலை முயற்சி தொடர்பாக ”நம்பகமான விளக்கம் அளிப்பது” ரஷ்யாவின் பொறுப்பு என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ரஷ்யா, ரஷ்யாஃபோபியா இருக்கும் பிரிட்டன் அதிகாரிகள், சர்வதேச சமூகத்தையும், பிரிட்டன் குடிமக்களையும் தவறாக வழிநடத்துவதாகவும், வெறித்தனமாக வெறுப்பூட்டும் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியது. -BBC_Tamil