அமெரிக்காவை நெருங்கும் ‘புளோரன்ஸ்’ புயல் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

நியூயார்க், அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அங்கு அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை புயல் தாக்குவது உண்டு.

இப்போது அதே போல் ஒரு புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி உள்ளது. அதற்கு ‘புளோரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்தநிலையில்,  ‘புளோரன்ஸ்’ புயல் என்ற புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருகிறது என்று வானியல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. அடுத்த 40 மணி நேரத்தில் அந்த பயங்கர புயல் அமெரிக்காவை தாக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 17 லட்சம் மக்கள் அவரசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் மையம் கொண்டு உள்ள ‘புளோரன்ஸ்’ புயல், மேற்கு திசை நோக்கி நகர்ந்து  வடக்கு அல்லது தெற்கு கரோலினாவை தாக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த புயல் மிகவும் ஆபத்தானது என கணிக்கப்பட்டு உள்ளது. 10-15 அங்குல அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் புயல் பற்றி டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பல வருடங்கள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க இருக்கிறது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெற்கு கரோலினாவில் ஒரு ஜெயிலில் இருந்த ஆயிரம் கைதிகளையும் வெளியேற்றி இருக்கிறார்கள். மீட்பு படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

-dailythanthi.com