அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு சேதமடைந்து, துண்டாகியுள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.
இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடலோரம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.
- சூறாவளி ஃபுளோரன்ஸ்: ‘பேரழிவு ஏற்படலாம்’ – பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்
- தொடர் சூறாவளிகள், உயரும் கடல் மட்டம்… இதுதான் காரணமா?
மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த இந்த சூறாவளி, உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதன் வேகம் மணிக்கு 165 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதால், இது இரண்டாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டது.
வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை
ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
“வெள்ளம் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம். இது மிகவும் ஆபத்தான சூறாவளி, ” என்று கூறியுள்ள லாங், “உங்களுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் வெளியேற மறுக்கிறீர்கள். கடல்மட்டம் அதிகரிக்கப்போகிறது,” என்று வெளியேற மறுக்கும் மக்களைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
கள நிலவரம் என்ன?
இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.
கரோலினாவின் சில பகுதிகளில் 20 – 30 அங்குலம் அளவுக்கு மழை பொழியும் என்றும், தனித்து உள்ள பகுதிகளில் அது 40 அங்குலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.
உலக வெப்பமயமாதல் காரணமா?
பருவநிலை மாற்றம் மற்றும் சூறாவளி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது.
கடலில் வெப்பம் அதிகமானால் அது சூறாவளிகளின் பலத்தை அதிகரிக்கும். ஆகவே, வரும் காலங்களில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்தால் சூறாவளிகளின் வீரியமும் அதிகரிக்கலாம்.
வளி மண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, சூறாவளியால் அதிக மழைப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
சூறாவளி ஏற்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பருவநிலை மாற்றதுக்கு உள்ள தொடர்புகளை அறிவது கடினமானது. -BBC_Tamil