சிரியாவின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் வன்முறைகள் காரணமாக, இம்மாத ஆரம்பத்திலிருந்து இதுவரை, 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள், இட்லிப் மாகாணத்தில் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள், இந்நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது.
வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இட்லிப்பும் அதைச் சூழவுள்ள பகுதிகளுமே, சிரியாவின் எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும், பாரிய நிலப்பரப்புகளாக அமைந்துள்ளன. அப்பகுதிகள் மீதே, அரசாங்கத்தின் அண்மைக்காலத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 30,452 பொதுமக்கள், இட்லிப் மாகாணத்திலிருந்து ஹமா மாகாணத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என, ஐ.நாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு முகவராண்மை தெரிவித்தது.
இட்லிப் மாகாணத்தில், பொதுமக்களின் செறிவு அதிகமாகக் காணப்படும் நிலையில், அங்கு இடம்பெறும் எந்த மோதலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமென்பது, சர்வதேச அமைப்புகளுக்குக் காணப்படும் அச்சமாகும்.
குறிப்பாக, இட்லிப் மீதான படை நடவடிக்கையை, சிரிய அரசாங்கம் இன்னமும் ஆரம்பித்திருக்கவில்லை என்ற போதிலும், அதற்கு முன்னராக அவ்வரசாங்கமும் ரஷ்யாவும் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக, ஏற்கெனவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை, இந்நிலைமையின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
“இட்லிப், 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமானப் பேரழிவாகவும் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் மாறாமலிருக்க, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் காணுதல் அவசியமாகும்” என, ஐ.நாவின் மனிதாபியமான விடயங்கள் மற்றும் அவசர நிவராண ஒருங்கிணைப்புக்கான கீழ்ச் செயலாளர் நாயகம் மார்க் லோகொக் எச்சரித்தார்.
-tamilmirror.lk