பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் பிரான்சிஸ் டோலென்சியோ தெரிவித்துள்ளார்.
மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி பிலிப்பைன்ஸின் முக்கியத் தீவான லூசான் தீவைத் தாக்கிவிட்டு மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
சமீபத்திய நிலவரம்
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில் வட கிழக்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாக்காவோ எனும் இடத்தில் மாங்குட் கரையைக் கடந்துள்ளது.
பெரும்புயல் என்று வகைப்படுத்தப்பட்டிருந்த இந்த சூறாவளியின் வேகம் தற்போது குறைந்துள்ளதால், நான்காம் வகை சூறாவளியாக இது இப்போது தரம் குறைக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: 5 பேர் பலி
- தொடர் சூறாவளிகள், உயரும் கடல் மட்டம்… இதுதான் காரணமா?
பிலிப்பைன்ஸ் மக்களால் ‘ஒம்போங்’ என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் இப்போதைய வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டராக உள்ளது.
டூகெகரோ நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் முற்றிலும் செயல்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தச் சூறாவளியின்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மாங்குட் சூறாவளி நகரும் பாதையில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
ஆறு அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும் எனும் எச்சரிக்கையால் ஆயிரக்கணக்கானவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். தலைநகர் மணிலா வழியாகப் பாயும் மரிக்கினா நதியில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்து சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோரம் அமைந்துள்ள அப்பாரி நகரின் மீட்பு மையமும் சூறாவளியால் சேதமடைந்துள்ளது. தொலைபேசி இணைப்புகள் இங்கு சேதமைடைந்து, இயங்காமல் உள்ளன.
2013இல் பிலிப்பைன்ஸில் உண்டான ஹையான் சூறாவளியின் நினைவுகளை மாங்குட் சூறாவளி தூண்டியுள்ளது. ஹையான் சூறாவளி வீசிய சமயத்தில் 7,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சக்திவாய்ந்த சூறாவளி
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு மாங்குட் சூறாவளிதான் இந்த ஆண்டில் இதுவரை உண்டான சூறாவளிகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளது.
வெள்ள நீர் பெருக்கெடுப்பதையும், குடியிருப்புப் பகுதிகளை சூறாவளிக்காற்று தாக்குவதை காட்டும் காணொளிகளை பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் பகிர்ந்துள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இப்பிராந்தியத்தில் சமீபத்திய தசாப்தங்களில் உண்டான மிகவும் பலமான வெப்ப மண்டலப் புயல் இதுதான் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாங்குட் சூறாவளி வரும் செவ்வாயன்று வலுவிழந்து வெப்பமண்டலக் காற்றழுத்தமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பாதிக்கப்படுமா?
ஞாயிறன்று ஹாங்காங்கை மாங்குட் சூறாவளி கடக்கும்போது இது மீண்டும் பெரும் புயல் என்று வகைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதே நிலை நீடித்தால், 1940கள் முதல் ஹாங்காங் சந்தித்து வரும் சூறாவளிகளிலேயே மாங்குட்தான் மிகவும் மோசமானதாக இருக்கும்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஜன்னல்களில் ‘X’ வடிவத்தில் டேப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
சூறாவளி நெருங்கும் சமயத்திலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு ஹாங்காங் மிகவும் அறியப்பட்ட இடமாக இருந்தாலும், அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு, மக்களை வெளியே வராமல் இருக்குமாறு கூறியுள்ளனர் என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் ராபின் பிராண்ட் கூறுகிறார்.
ஹாங்காங்கின் லாண்டாவு தீவில் உள்ள டாய்-ஓ எனும் கிராமத்தில் இருக்கும் ஆன்டனி லீ எனும் அதிகாரி பொதுமக்கள் இந்த சூறாவளியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார். -BBC_Tamil