தாலிபன் மற்றும் மற்ற தீவிரவாத குழுக்களுக்கெதிரான அமெரிக்கா தலைமையிலான ராணுவ படைகளின் போராட்டத்துக்கு இடையில், ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி தினந்தினம் வந்து கொண்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான் மோசமான நிலையை அடைந்ததற்கான காரணத்தை அலசுகிறார் பிபிசியின் தாவூத் அசாமி.
வன்முறைகள் மோசமடைந்து வருகிறதா?
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியதிலிருந்து இதுபோன்ற மோசமான பாதுகாப்பற்ற நிலையை ஆப்கானிஸ்தான் ஒருபோதும் அடைந்ததில்லை. கடந்த 17 ஆண்டுகளுக்கு வீழ்த்தப்பட்ட தாலிபனின் ஆட்சிக்கு பிறகு, இப்போதுதான் தலிபான் அதிகபட்ச பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
- அமெரிக்காவின் எதிரி, தாலிபனின் நண்பர் – உயிரிழந்த ஹக்கானி யார்?
- படை பலத்தில் சரிவா? என்ன சொல்கிறது ஆப்கானிஸ்தான்?
ஆப்கானிஸ்தான் போர் ஏற்கனவே அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட போர் என்ற இடத்தை பெற்றுவிட்டது. காலம் செல்லச்செல்ல மோதல்கள் தீவிரமடைந்ததோடு, சிக்கலானதாகவும் மாறியுள்ளது.
தாக்குதல்தாரிகள் இன்னும் பெருகியுள்ளதுடன், பெரியளவில் அடிக்கடி உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய மோசமான தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு பலமடைந்துள்ளனர். அமெரிக்கா தலைமையிலான அரசப்படையும், தலிபான் தலைமையிலான தீவிரவாதிகளின் தரப்பும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றுவதற்கு தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளான காஸ்னி மற்றும் பாரா ஆகியவற்றில் தலிபான் இயக்கத்தினர் ஊடுருவியபோது அவர்களின் மீது அமெரிக்கா தலைமையிலான அரசப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். ஆனால், இது போன்ற தாக்குதல்களினால் தலிபான்கள் சோர்ந்துவிடவில்லை, மாறாக தங்களது உறுதியை அதிகரித்துக்கொண்டு, தங்களது படையை பலத்தை கூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தோல்வியுற்ற அரசப்படையினர் விட்டுச்செல்லும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் எடுத்துக்கொள்கின்றனர்; பல நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் தொடர்ந்து தலிபான் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மற்ற வெளிநாட்டு படைகளை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மற்றும் காந்தகார் ஆகிய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அதேவேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
டிரம்பின் புதிய திட்டங்களின் நிலை என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்காவின் புதிய அணுகுமுறையையும், திட்டங்களையும் அறிவித்து ஒரே வருடமாகிறது.
தலிபான்களை வீழ்த்தி, அதை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்கா நான்கு வழிகளை கையாள நினைத்தது.
ராணுவத்தின் அழுத்தத்தை அதிகரிக்கும் வண்ணம் அதிகளவிலான படைவீரர்களை குவிப்பது, தீவிரமான வான் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை முதல் திட்டமாக இருந்தது.
இரண்டாவதாக, தலிபான்களின் நிதித்தேவைக்கு மூலமாக திகழும் போதைமருந்து உற்பத்தி மற்றும் மற்ற வழிகளை அடியோடு அழிப்பது.
தலிபான்களின் செயற்பாடு எந்தளவிற்கு நியாயமானது போன்ற கேள்விகளை மத குழுக்களிடம் முன்வைப்பது மற்றும் தலிபான் இயக்க தலைவர்கள் பெரும்பாலானோர் இருக்கும் பாகிஸ்தானிடம் அவர்களை ஒப்படைக்கவோ அல்லது வெளியேற்றவோ வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது போன்ற திட்டங்களை அமெரிக்கா வைத்திருந்தது.
ஆனால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள நான்கு திட்டங்களிலும் அமெரிக்கா தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது.
போர் தீவிரமடைந்து வருவதற்கான பிரதான காரணமென்ன?
இருதரப்பினரும் ஒரே சமயத்தில் தங்களது ஆதிக்கத்தை அதிகரிக்கவும், மேலதிக பகுதிகளை கைப்பற்றுவதற்கும் முயற்சித்து வருகின்றனர்.
- அகதி முகாம் முதல் உலகின் ‘நம்பர் ஒன்’ பௌலர் ஆனது வரை – ரஷீத் கான்
- பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை
கடந்த 2001ஆம் ஆண்டு முதலே அமெரிக்காவின் திட்டம் தெளிவற்று இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா தலைமையிலான படையினர் நடத்திய பல்வேறு விதமான தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், தலிபான்களின் வலிமை குன்றியதாக தெரியவில்லை.
ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இணைந்து நடத்திய செயல்திட்டத்தில் அந்நாட்டில் 15,000 கிளர்ச்சியாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது அந்நாட்டிலுள்ள கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை 60,000 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் படையினர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் காலூன்றிய பிறகு இந்த மோதல்களின் தீவிரம் உச்சத்தை அடைய தொடங்கியது. ஆப்கானிஸ்தானின் பொதுமக்கள் வாழும் நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல மோசமான தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
தங்களது ஆதிக்கம் உச்சபட்ச நிலையை அடைந்துள்ள சூழ்நிலையில், அதை பயன்படுத்தி அமைதி பேச்சுவார்த்தையில் வலிமையான குரலுடன் பேசுவதற்கு தலிபான் நினைக்கிறது.
- பாகிஸ்தானுக்கு 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா
- பாகிஸ்தான் தேர்தல்: மோதியைப் பற்றி இம்ரான்கான் என்ன நினைக்கிறார்?
ஆப்கானிஸ்தானின் அமைவிடத்திற்கு அருகே இருக்கும் பாகிஸ்தான், ரஷ்யா, இரான் ஆகியவற்றுடனான அமெரிக்காவின் உறவு பிரச்சனையை இன்னும் பெரிதாக்குகிறது.
தேர்தல் எப்போது நடக்கும்?
மூன்றாண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டிய ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலை வரும் அக்டோபர் மாதம் 20 தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களினால் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி மீண்டுமொருமுறை எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கே இத்தனை பிரச்சனைகள் என்றால், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அதிபர் தேர்தல்கள் நடைபெறுவது குறித்து இப்போதே சந்தேகம் எழுந்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை நடக்குமா?
இந்த போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இந்த முடிவு ராணுவ நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எட்டப்படாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை அனைவரும் மெதுவாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் மூன்று நாட்கள் நடைமுறையிலிருந்த தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத்தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க மற்றும் தலிபான் தரப்பினர் கத்தாரில் நேருக்குநேர் நடத்திய பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இரான், ரஷ்யா, சீனா, இந்தியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த செய்வதும் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது. -BBC_Tamil