பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.
அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது.
சீனாவின் தெற்கு கடலோர நகரமான ஜியாங்மென்னுக்கு அருகே மாங்குட் சூறாவளி உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் கரையை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதுடன், அங்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் தொடர்ந்து வீசி வரும் அதிவேக காற்று மற்றும் கனமழையின் காரணமாக அங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், 800க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை/ புறப்பாடு ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டின் வலிமைமிக்க புயலாக மாங்குட் சூறாவளி கருதப்படுகிறது.
சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு கணக்கிட்டு வருகிறது.
இதுவரை 59 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது; தொலைத்தொடர்பு கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. எனவே புயலால் ஏற்பட்ட சேதங்களை தெளிவாக கணக்கிட முடியவில்லை.
விவசாயத்தை மையமாக கொண்ட காக்கயான் மாகாணத்தில் பயிர்களுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் பாக்கோ என்ற இடத்தில் சனிக்கிழமையன்று இந்த புயல் கரையை கடந்தது.
5 மில்லியன் பேர் புயல் தாக்கிய பகுதிகளில் வசித்து வந்தனர். 1 லட்சம் பேர் தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதங்கள் என்னென்ன?
காக்கயான் மாகாணத்தில் தலைநகரான டுகெகாரோ நகரில் உள்ள அனைத்து கட்டடங்களும் சேதமடைந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை பெரும்பான்மையாக கொண்ட பகுதியாதலால் அதிகபட்ச பயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவின் அரசியல் ஆலோசகர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் இன்னும் ஆபத்தின் பிடியில் தான் இருக்கிறது என்று பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“காற்று வந்த பிறகு மழை வரும், மழை வந்தால் நீர் வரும். இப்போது அடுத்த பிரச்சனை வெள்ளம். எனவே மீண்டும் இந்த பகுதியில் நுழைவது சிரமமாக இருக்கும்” என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
லூசன் தீவில் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த 200 பேர் அருகில் இருந்த ஆறு ஒன்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வேறு இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஜோனத்தன் ஹெட் தெரிவிக்கிறார்.
இந்த மாங்குட் புயல் தற்போது சீனாவின் தெற்கு பகுதி நோக்கி செல்ல உள்ளது.
பிலிப்பைன்ஸில் இம்மாதிரியான சூறாவளிகள் அடிக்கடி ஏற்படுவது சகஜமான ஒன்றுதான் என்ற போதிலும் இந்த மாங்குட் புயல் 2013ஆம் ஆண்டு 7000 பேரை பலிவாங்கிய ஹயன் புயலை நினைவூட்டுகிறது
அந்த புயலுக்கு பிறகு தயாரிப்புகளும், வெளியேற்ற முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மாங்குட் புயல் குறித்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயணங்கள் தடை செய்யப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு மேலும் ராணுவம் தயார் நிலை வைக்கப்பட்டிருந்தது.
ஹாங்காங் மக்கள் மணற்மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஜன்னல்களையும், எளிதில் உடைய கூடிய பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
ஹாங்காங்கின் லாண்டாவோ தீவில் உள்ள மீன்பிடி கிராமமான தாய் ஓவில் அவசர மையத்தின் அரசு அதிகாரி ஒருவர் உள்ளூர்வாசிகள் இந்த மாங்குட் புயலை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
“இந்த புயல் பெரும் ஆபத்தானதாக இருக்கும். இது அனைவரும் உறங்கும் சமயத்தில் வரும். எனவே இருட்டுவதற்குள் மக்கள் வெளியேற வேண்டும்” என அவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மாங்குட் புயல் செவ்வாயன்று வலு இழக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -BBC_Tamil