புளோரன்ஸ் புயல்: வரலாறு காணா வெள்ளம்; தொடர்பு அறுந்துபோன அமெரிக்க நகரம்

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிவரும் புளோரன்ஸ் சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கடற்கரை நகரமான வில்மிங்டன் வட கரோலினா மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லா சாலைகளும் அணுக முடியாதவையாக ஆகியுள்ளன. எனவே வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நகரில் இருந்து தள்ளியே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

1.2 லட்சம் மக்கள் தொகை உடைய இந்த நகரம் மாகாணத்துக்குள்ளேயே ஒரு தீவு போல இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப் புயலால் “ஆபத்து அதிகரித்து வருகிறது” என்றும் முன்பை விட இப்போதுதான் இந்தப் புயல் ஆபத்தானதாக மாறியிருக்கிறது என்றும் கூறியுள்ளார் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர்.

புளோரன்ஸ் புயலினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கேட்டுக்கொண்டார்.

புளோரன்ஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கரையை கடந்தாலும், தொடர்ந்து வடக்கு, தெற்கு கரோலினாவை நோக்கி நகர்ந்து வருவதுடன் வரலாறு காணாத மழையையும் பொழிந்து வருகிறது.

வடக்கு கரோலினாவில் 10 பேர் மற்றும் தென் கரோலினாவில் 5 பேர் என ஃபுளோரன்ஸ் புயல் பாதிப்பின் காரணமாக இதுவரை 15 உயிரிழந்துள்ளனர்.

மெதுவாக நகரும் இந்தப் புயல் மேற்கு நோக்கி செல்கிறது. ஆனால், அது வடபுறம் திரும்பி ஓஹியோ மாநிலத்தை நோக்கிச் செல்லவுள்ளது.

வில்மிங்டன் பகுதியில் இன்னும் இரண்டு நாள்களுக்கு திடீர் வெள்ளம் ஏற்படலாம் என தேசிய தட்ப வெட்ப மையம் எச்சரித்துள்ளது.

எவ்விதமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?

வில்மிங்டன் மழை மேகம்.

முதலில் சூறாவளியாக உருவெடுத்திருந்த புளோரன்ஸ், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வடக்கு மற்றும் தென் கரோலினாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் தொடருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதற்கு முன்பில்லாததைவிட ஆபத்தான நிலையை இது தற்போது அடைந்துள்ளதாக” வடக்கு கரோலினா ஆளுநர் கூப்பர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தென் கரோலினாவின் பெரும்பாலான பகுதிகளில் 60 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளதால் அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புளோரன்ஸ் மலைப்பகுதிகளை அடையும்போது நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். -BBC_Tamil