அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட “முன்னோக்கிய பாய்ச்சல்” என்று கிம் தெரிவித்தார்.
மேலும், விரைவில் தான் தென் கொரியத் தலைநகர் சோல் நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று வட கொரிய உயர் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்தார். அவர் கூறியது நிறைவேறினால், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வட கொரியத் தலைவர் ஆவார்.
உச்சிமாநாடு: ஆணு ஆயுத ஒழிப்பு
அணு ஆயுத ஒழிப்பு என்பதே இந்த உச்சி மாநாட்டின் பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கி அமெரிக்காவும் வட கொரியாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விரிவான அடிப்படையில் உடன்பட்டன. இருந்தபோதிலும், தற்போது அதன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன.
தற்போது தனது நிலைப்பாட்டை பியோங்யாங் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூடவும் அதை “சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் முன்னிலையில்” செய்யவும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒப்புக்கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.
தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தில் ஆய்வு செய்ய சுயாதீன ஆய்வாளர்களை அனுமதிப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுவதாக பிபிசி சோல் செய்தியாளர் லாரா பிக்கெர் கூறுகிறார்.
தாங்சாங்-ரி ஏவுகணை தளம் அழிக்கப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக கூறிய லாரா, அங்கு ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
- தாங்சாங்-ரி தளம், 2012ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவின் பிரதான ஏவுகணை தளம்.
- அமெரிக்காவை இலக்கு வைத்து இயங்கும் வட கொரிய ஏவுகணைகளுக்கான இயந்திரங்களை பரிசோதனை செய்ய இந்த தளம் பயன்படுத்தப்பட்டது.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
- ஏமன் போர்: ’50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு’
மேலும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக நம்பப்படும் யோங்பியான் அணு ஆயுத தளத்தையும் வடகொரியா மூடிவிடும். ஆனால், அமெரிக்கா சில பரஸ்பர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தளம் மூடப்படும்.
கடந்த ஜூன் மாதம் அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் சந்தித்தனர். அதில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த வேலைகளில் ஈடுபவதற்கு இரு தலைவர்களும் உறுதியளித்தனர். அதற்கு சற்று முன்பு தனது புங்க்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளத்தை வடகொரியா தகர்த்தது.
“அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் முக்கியமான பங்களிப்பே காரணம்” என்று டிப்ளமேட் பத்திரிகை ஆசிரியர் அங்கித் பாண்டா பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் இந்த இழப்புகள் எதுவுமே கிம்முக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. குறுகிய காலத்திற்கு ஆயுதங்களை கைவிட வேண்டியிருக்கும். அவ்வளவுதான். ஆனால் அமெரிக்க-வட கொரியா பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது உதவும்.
மாநாட்டு முடிவுகள்: வட மற்றும் தென் கொரியா
தென்கொரியாவுக்கு வரவேண்டும் என வட கொரிய அதிபருக்கு மூன் ஜே இன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் கிம் ஜாங்-உன் தென்கொரியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
அதுபோல 2032 கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இரு நாடுகளும் ஒன்றாக நடத்தவிருக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ பதற்றங்களை குறைப்பது, இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள ராணுவ கண்காணிப்பற்ற பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களை தவிர்ப்பது போன்ற முக்கிய அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட கொரிய ராணுவத் தலைவரும் கையெழுத்திட்டனர்.
- அனுராதபுரத்தை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலையிலும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
- தாஜ்மஹால்: உலக அதிசயத்தின் எழிலுக்கு என்ன ஆச்சு?
வட கொரியாவில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் தென் கொரிய அதிபர் வட கொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.
இந்த உச்சிமாநாடு அமெரிக்காவுக்கு முக்கியமானதா?
இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது.
இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.
மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது. -BBC_Tamil