அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா?

அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான ராட் ரோசன்ஸ்டைன் இந்த குற்றச்சாட்டுகள் “தவறானது என்றும் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை” என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடப்பதை ரகசியமாக பதிவு செய்யலாம் என ராட் பரிந்துரைத்ததாக நியூ யார்க் டைம்ஸில் செய்திகள் வெளியானது.

ஆனால் அது கேலியாக கூறப்பட்டது என செய்தி வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

கடந்த வருடம் எஃப்பிஐயின் இயக்குநரை பணியிலிருந்து டிரம்ப் நீக்கிய பிறகு ராட் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ் கோமி சட்ட அமலாக்க முகமையின் விசாரணையின் மேற்பார்வையாளராக இருந்தார். அவரின் பணி நீக்கம் குறித்து கேட்டபோது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீட்டை டிரம்ப் காரணமாக தெரிவித்தார்.

அமெரிக்க நீதித்துறையில் வெளியானவை, “ஒரு நீண்ட நாள் துர்நாற்றம்” என்று வெள்ளியன்று மிசோரியில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப் கூறினார்.

எஃப் பி ஐ-யில் உள்ள தீயவர்களை பணி நீக்கம் செய்த மாதிரி, தனது நிர்வாகத்தில் உள்ளவர்களையும் பணி நீக்கம் செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் என்னென்ன?

அமெரிக்க அதிபர் நிர்வாகத்துக்கு தகுதியற்றவராக இருந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அமெரிக்க அரசியல் அமைப்பின் 25ஆவது சட்டப் பிரிவுக்கு ஆதரவளிக்க புதிய நபர்களை நியமனம் செய்வது குறித்து ரோசன்ஸ்டைன் விவாதித்ததாக நியூ யார்க் டைம்ஸில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் டிரம்பின் கொந்தளிப்பு மற்றும் செயல்பாட்டின்மையை வெளிப்படுத்தும் விதமாக டிரம்பின் நடவடிக்கையை ரகசியமாக பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதித்துறைக்கும் எஃப்பிஐ அதிகாரிகளுக்கும் நடந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

அந்த சந்திப்பின் போது இதுகுறித்து விளக்கப்பட்ட பலரையும் அந்த செய்தி ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளது.

ராட் ரோசன்ஸ்டைனின் கருத்து என்ன?

நியூ யார்க் டைம்ஸின் அந்த அறிக்கை உண்மையற்றது என்றும், அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்றும் ராட் தெரிவித்துள்ளார்.

“பெயர் வெளியிடாமல் கூறப்படும் நபர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் வந்த செய்திக்கு நான் கருத்துக்களை தெரிவிக்க போவதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

“நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதிபருக்கும் எனக்குமான உறவை வைத்து கூறுகிறேன். 25ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்துவதற்கான எந்த தேவையும் எனக்கில்லை” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க

எது உண்மை?

நீதித்துறையை சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவிக்கையில், ரோசைஸ்டைனின் கருத்துக்கள் ஒரு நகைச்சுவை என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சந்திப்பில் இருந்த பெயர் வெளியிடாத நபர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், ராட்டின் கருத்துக்கள் கேலியாக சொல்லப்பட்டது என்றும் டிரம்பின் பேச்சுக்களை பதிவு செய்ய வேண்டும் என அவர் தீவிரமாக கருதவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

25 சட்டப் பிரிவை பயன்படுத்தி அதிபரை பதிவி நீக்கம் செய்ய வேண்டுமானால், பெரும்பாலான அவை உறுப்பினர்கள், துணை அதிபர் மற்றும் காங்கிரஸின் பெரும் உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நீதித்துறை அதிபரை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆண்ட்ரூ மெக்கேப் தெரிவிக்கும் போது, “என்ன செய்ய வேண்டும். அதிபரின் நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டுமா” என ராட் கேட்டுள்ளார் என வாஷிங்டன் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil