டெக்ரான், டெக்ரானில் நேற்று ஈரான்–ஈராக் போர் தொடக்கத்தை நினைவுகூர்ந்து நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி ஆவேச உரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரானின் செல்வாக்குமிக்க ஆயுதங்கள் என்று சொன்னால் அவை, ஏவுகணைகள்தான். நமது எதிரிகளிடம் (அமெரிக்கா) இருந்து சமீபத்தில் வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு நமது ஏவுகணைகளை நாம் பாராட்டுகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கியது கிடையாது. எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததும் இல்லை. ஏன், எந்த ஒரு நாட்டையும் தாக்கியது கூட கிடையாது. ஈரான் விடுக்கும் செய்தியே சமாதானம், நல்லிணக்கம், அண்டை அயலாருடன் நட்புறவுதான். ஈரான் ஏவுகணைகள் உள்ளிட்ட தனது தற்காப்பு ஆயுதங்களை கைவிடாது. இதுதான் அமெரிக்காவை கோபப்பட வைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஈரான் தனது தற்காப்புத்திறனை மேம்படுத்தும்’’ என்று கூறினார்.
மேலும், ‘‘ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை போன்று டிரம்பையும் ஈரானியர்கள் தோற்கடிப்பார்கள். சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியை அமெரிக்காவும் அடையும்’’ என்றும் குறிப்பிட்டார்.
-dailythanthi.com