ஜேர்மனியில் சூழலை மாசு படுத்தாத அதிவேக ஹைட்ரஜன் ரயில் சேவை அறிமுகம்

ஒருமுறை டேங்கை நிரப்பினால் 1000 Km தூரம் செல்லக் கூடிய சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயில் சேவையை முதன் முறை அறிமுகப் படுத்தி ஜேர்மனி சாதனை படைத்துள்ளது.

இந்த ரயிலில் உள்ள லிதியம் மற்றும் அயன் பேட்டரிகளை ரீ சார்ஜ் செய்தும் இதனை இயக்க முடியும்.

வடக்கு ஜேர்மனியிலுள்ள பெர்ம்வெர்ட் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கான ஹைட்ரஜன் நிரப்பும் பங்கு அமைக்கப் பட்டுள்ளது. 300 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய இந்த ரயில் மணிக்கு 140 Km வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதனை பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டாம் தயாரித்துள்ளது. இந்த ரயிலானது ஹைட்ராயில் என அழைக்கப் படுகின்றது. செப்டம்பர் 17 முதல் இதன் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ஒரு ரயிலின் தயாரிப்புச் செலவே ரூ 50 கோடியாக உள்ள நிலையில் மேலும் 14 ஹைட்ரஜன் ரயில்களை வாங்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

ஜேர்மனியைத் தொடர்ந்து பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, கனடா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளும் ஹைட்ரஜன் ரயில்களை இனி வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளன. இதேவேளை சனிக்கிழமை ஹாங்கொங்கில் இருந்து சீனாவின் மத்திய நிலம் வரை செல்லக் கூடிய அதிவேக புல்லட் ரயில் சேவையும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. சுமார் 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆசியாவின் நிதிமையமான ஹாங் கொங் இலிருந்து தினசரி 80 000 இற்கும் அதிகமான பயணிகளை சீனாவுக்குக் கொண்டு செல்லவும் அங்கிருந்து அழைத்து வரவும் உள்ள இந்த புல்லட் ரயில் சேவை 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 8 வருடங்களாகக் கட்டப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com