15 வீரர்களை இழந்த நிலையிலும் சிரியாவின் வான் பாதுகாப்பை ரஷ்யா மேம்படுத்துவதேன்?

ஒரு இஸ்ரேலிய வான் தாக்குதலின்போது சிரியா படையினர் தவறுதலாக ஒரு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய நிகழ்வு நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கை வீழ்த்தும் ஏவுகணைகளை சிரியாவுக்கு அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இன்னும் இரண்டு வாரத்துக்குள் சிரியாவின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் எஸ்-300 ஏவுகணைகள் வழங்கப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கே சொய்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ராணுவ கண்காணிப்பு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 15 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவேண்டும் என சிரியாவும் ரஷ்யாவும் கூறினாலும், இஸ்ரேல் பொறுப்பேற்க மறுத்துவருகிறது.

ரஷ்யா சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் சிரியா அதிபர் ஃபஷர் அல்- அசாத்தை ஆதரித்து வருகிறது.

கடந்த வாரம் என்ன நடந்தது?

இல்யூஷின் Il-20 விமானம், வட மேற்கு நகரமான லடாக்கியாவிற்கு அருகில் உள்ள ரஷ்யாவின் ஹிமேமீம் விமானதளத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் சிரியா கடற்கரையிலிருந்து சுமார் 35 கிமீ (22 மைல்) தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

Il-20 விமானம், லடாக்கியா மாகாணத்தில் உள்ள சிரியாவின் இடங்களில் நான்கு இஸ்ரேலிய எஃப் -16 ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது காணாமல் போனதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

”கடலில் இருந்து லடாக்கியா நகரத்திற்கு வருகிற எதிரி ஏவுகணைகளை தடுத்துள்ளதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது” என்று சானா செய்தி நிறுவனம் கூறுகிறது.

உள்ளூர் நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு முன்பு லடாக்கியாவில் வான் தாக்குதல்கள் நடந்ததாக சிரிய தொலைக்காட்சி பதிவு செய்தது.

அரை மணி நேரத்திற்கு பிறகு, சிரியாவின் விமான பாதுகாப்பு படைகள், எதிரிகளின் ஏவுகணைகளுக்கு பதிலடி தந்ததாக சனா தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

ரஷ்யா சொல்வது என்ன?

ரஷ்ய விமானங்களை தாக்குதலுக்கான கவசமாக இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது என்ற தனது நிலைப்பாட்டை கடந்த ஞாயற்றுகிழமை மீண்டும் கூறியது ரஷ்யா.

தாக்குதல் குறித்த முறையான அறிவிப்பை வெளியிட இஸ்ரேல் தவறி விட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

” இஸ்ரேலிய போர் விமானிகளின் செயல்கள் 15 ரஷ்ய வீரர்களின் உயிரை காவு வாங்கிவிட்டது. இது தொழில்முறை நேர்த்தி குறைபாடு அல்லது ஒரு குற்றவியல் அலட்சியத்தை காட்டுகிறது ” என அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Russian MoD map showing flight paths of Israeli F-16s and Russian IL-20 that was shot down off Syria on 17 September 2018

இஸ்ரேலின் பதில் என்ன?

இந்நிகழ்வுக்கு சிரியா படைகளே பொறுப்பேற்கவேண்டும் என்ற தனது வாதத்தை இஸ்ரேல் தொடர்ந்து அழுத்தமாக தெரிவித்துவருகிறது.

லெபனானின் ஹெஸ்பொல்லாவிற்கு இரான் சார்பில் உயிருக்கு ஊறு விளைவிக்கும் துல்லியமான ஆயுதங்களை தயாரிக்கும் பகுதியில் உள்ள சிரியா படையினர் மீது தனது விமானங்கள் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

லெபனானின் ஷியா தீவிரவாதிகள் குழு மற்றும் இரான் ஆகிய இரண்டும் சிரியா அரசின் கூட்டாளிகள். சிரியாவில் உள்ள இருநூறுக்கும் அதிகமான இரான் இலக்குகளை கடந்த 18 மாதங்களில் இஸ்ரேல் குறிவைத்து தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சிரியா படையினர்

சிரியாவின் வான் பாதுகாப்பை ரஷ்யா எடுத்துக் கொள்கிறதா?

லடாக்கியா அருகே ரஷ்ய விமானதளத்துக்கு மிக நெருக்கத்தில் வான் தாக்குதல் நடந்தபோது ரஷ்யாவின் சிகப்பு எல்லைக்குள் இஸ்ரேலிய விமானப் படையினர் நுழைந்ததாக தெரிகிறது. ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் அதற்கு எதிர்வினையாற்ற ரஷ்யா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் நோக்கங்கள் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

ஹெஸ்பொல்லாவுக்கு ஆயுதங்களை வழங்குவதை தடுப்பதும், சிரியாவில் ஈரானின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதும் தனது பிரதான நோக்கம் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் ரஷ்யா இதை கண் மூடி வேடிக்கை பார்க்காது. இதனால் இஸ்ரேலியர்கள் இனி வரும் நாள்களில் கவனமாக தனது அடியை எடுத்துவைக்கவேண்டும். வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இப்பகுதிகளில் கடும் பதற்றம் நிலவக்கூடும். -BBC_Tamil