ஐ.நா.வில் டிரம்ப்: “லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது இந்தியா”

பல லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு நடுத்தர வர்க்கமாக மாற்றியிருப்பதாக இந்தியாவைப் புகழ்ந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 73-வது கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மத்திய கிழக்கு முழுவதிலும் குழப்பம், மரணம், அழிவு ஆகியவற்றை விளைவிப்பதாக இரானை அவர் குற்றம் சாட்டினார்.

இரானுடன் வல்லரசுகள் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த நிர்வாகத்தைக் காட்டிலும் தமது தலைமையிலான நிர்வாகம் நிறைய சாதித்துள்ளதாக அவர் கூறினார்.

அவர் இதைக் கூறியபோது சபையில் இருந்த பலரும் சிரித்துவிட்டனர். இதற்குப் பதிலாக தாமும் சிரித்த டிரம்ப், தாம் இப்படிப்பட்ட எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை என்றார்.

அமெரிக்கா முன்னெப்போதையும்விட வலுவாக, வசதியாக, பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப்

வட கொரியாவுடன் அமெரிக்கா தமது உறவை மேம்படுத்திக்கொண்டதையும், சீனாவுடனான வணிக உறவில் கடுமை காட்டியதையும் அவர் சரி என்று வாதிட்டார்.

தமது சொந்தப் பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு உள்ள உரிமையைப் பற்றி அவர் வலியுறுத்திப் பேசியது, அவரது பேச்சின் முக்கிய சாரங்களில் ஒன்று.

“இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தமது சொந்த பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, பாரம்பரியங்களை தொடர்வதற்கு உள்ள உரிமையை நான் மதிக்கிறேன். எப்படி வாழ்வது, வேலை செய்வது, வழிபடுவது என்பது குறித்து அமெரிக்கா உங்களுக்கு சொல்லாது. அதற்குப் பதிலாக எங்கள் இறையாண்மையை மதிக்கும்படி உங்களைக் கோருகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இரான் பற்றி…

அண்டை நாடுகளையோ, எல்லைகளையோ, நாடுகளின் இறையாண்மையையோ இரான் மதிப்பதில்லை. ஆனால், இராக்கின் தலைவர்கள் அந்நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்து அதை தம்மை வளப்படுத்திக் கொள்ளவும், மத்தியக் கிழக்கிலும் அதற்கப்பாலும் வன்முறை பரப்பவும் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார்.

இரான் மீது அமெரிக்கா மீண்டும் தடைகள் விதித்ததை மத்தியக் கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் ஆதரிக்கின்றன என்றார் டிரம்ப்.

வட கொரியா பற்றி…

சிங்கப்பூரில் நடந்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் உடனான சந்திப்பு சில மாதங்கள் முன்புவரை நினைத்துப் பார்த்திராத மாற்றங்களை கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

வட கொரிய ஏவுகணைகள் நாலாபுறமும் பறப்பதும் அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனைகளும் நின்றுபோயுள்ளன. பல நாடுகளின் ஒத்துழைப்புடன் வட கொரியாவுடன் மோதல் போக்கை மாற்றி துணிச்சலான, புதிய அமைதிக்கான முயற்சியை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil