அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் ‘தலையிடுவதற்கு’ சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
“அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்” என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இறங்கிய நாளிலிருந்து இதுவரை டொனால்டு டிரம்ப் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், இந்த சமீபத்திய குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
சீனாவின் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர், இது “தேவையற்ற குற்றச்சாட்டு” என்று கூறியதுடன் கண்டமும் தெரிவித்தார்.
- இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப்
- ஐ.நா.வில் டிரம்ப்: “லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது இந்தியா”
அமெரிக்க அதிபரின் நான்காண்டுகால பதவியில் பாதிக்காலத்தை அதாவது இரண்டாண்டுகாலத்தை கடக்கும்போது அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களின் புதிய ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
டிரம்ப் என்ன சொன்னார்?
உலகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி யாரும் அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) நியூயார்க்கில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசியபோது, அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்து வருவதாக எவ்வித ஆதாரமுமின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
“துரதிருஷ்டவசமாக, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் எனது தலைமையிலான நிர்வாகத்திற்கெதிராக செயல்படுவதற்கு சீனா முயற்சித்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
“அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் நாங்கள் வர்த்தகம் உள்பட அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
- சிரியா அதிபரை கொல்ல உத்தரவிட்டாரா டிரம்ப்?
- இளம் வயது பாலியல் தாக்குதல் பற்றி அமைதி காத்தது ஏன்? அமெரிக்க தொகுப்பாளர் பத்மா விளக்கம்
“எதிர்வரும் இடைக்கால தேர்தலில் சீனா எந்த விதத்திலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.”
அதே கூட்டத்தில் பேசிய சீனாவின் வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி, “மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை சீனா தொடர்ந்து கடைபிடித்துள்ளது” என்று கூறினார்.
“இதுதான் சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் பாரம்பரியம்” என்றும் அவர் அப்போது கூறினார்.
“எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், சீனா மீதான இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் சீனாவின் “திட்டம்” என்று கூறும் குற்றச்சாட்டுகள் சார்ந்த பத்திரிகைகளின் செய்தி துண்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஐநா கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீனாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் சான்றுகள் ஏதாவது உள்ளதா என்று டிரம்பிடம் கேட்டபோது, தான் அதை பகிரங்கமாக வெளியிட முடியாது என்றும், ஆனால் அது கண்டிப்பாக வெளிவரும் என்றும் தெரிவித்தார். -BBC_Tamil