“சட்டவிரோதமான மசோதா”: 400 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்

சுமார் 400 பேர் இன்று பின்னேரத்தில் கேஎல்சிசி பார்க்கில் கூடி அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தலையிடவில்லை.

ஆனால், அந்த பார்க்கின் பாதுகாவலர்கள் அங்கு முழுமியிருந்தவர்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மேற்பார்வையாளர் உரையாற்றுதல், சுலோகம் எழுப்புதல் மற்றும் செய்தியாளர் கூட்டம் நடத்துதல் போன்றவற்றுக்கான முயற்சிகளை முறியடிப்பதில் கவனம் செலுத்தினார்.

இந்த நிகழ்வின் மூன்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வோங் சின் ஹுவாட் அந்த பாதுகாப்பாளரின் முயற்சியைத் தோற்கடிக்கும் வகையில் அங்கு கூடியிருப்பவர்களின் கூட்டம் “தனிப்பட்டவர்களின் கூட்டம்” என்றும் அந்த மணி 2 சம்பவத்தை ஒரு “பிக்னிக்” என்றும் அது எதிர்ப்பு கூட்டம் அல்ல என்றும் துடுக்காகக் கூறி சமாளித்தார்.

இன்றையக் கூட்டத்தின் நோக்கம் பொதுக் கூட்டங்கள் சாதாரணமான ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களாகும் என்பதைத் தெரியப்படுத்துவதாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாட்டைப் பற்றி நாம் நினைத்தவுடனே அச்செயல் சட்டவிரோதமாவது ஏன்? தேசப்பற்றுடையவராக இருப்பதில் என்ன தவறு?”, என்று அவர் வினவினார்.

மசோதாவே சட்டவிரோதமானது

 

அந்த மசோதா மறுஆய்வு செய்யப்படும் என்ற அமைச்சரவையின் அறிவிப்பு குறித்து கேட்டபோது, சமூக ஆர்வலரும் ஏற்பாட்டாளருமான மரியா சின் அப்துல்லா அதைத் திருத்துவது போதாது. அதை முற்றிலும் கைவிட வேண்டும் என்றார்.

“ஏனென்றால், அந்த மசோதாவே சட்டவிரோதமானது”, என்று மரியா கூறினார்.

பிற்பகல் மணி 2.40 வரையில் நடந்த அந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றில் ஒன்று யோகா பயிற்சியுமாகும்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ல்ஸ் சந்தியாகோ, லிம் லிப் எங் ஆகியோருடன் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் இடைக்காலத் தலைவர் எ.வேதமூர்த்தி மற்றும் செக்சுவாலிட்டி மெர்தேக்கா ஏற்பாட்டாளர் பாங் தெய்க்கும் அடங்குவர்.

மீண்டும் அடுத்த சனிக்கிழமை சந்திப்போம் என்ற முழக்கத்துடன் அவர்கள் கலைந்து சென்றனர்.