அமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு “வாய்ப்பேயில்லை” என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட கொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தொடர் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ரி யோங்-ஹோ கூறினார்.
தங்கள் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கப்பட வேண்டுமென்று வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வட கொரியாவின் கருத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
இருப்பினும், வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படுமென்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினர். அக்கூட்டத்தின் முடிவில் வட கொரியா தனது அணு ஆயுத திட்டங்களையும், செயல்பாடுகளையும் கைவிடுமென்று கிம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
ரி என்ன கூறினார்?
“அணுஆயுத கைவிடலுக்கு முன்னிலை” என்ற அமெரிக்காவின் வற்புறுத்தல் கலந்த அணுகுமுறை “தடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது” என்று அவர் கூறினார்.
“சமீபத்திய முட்டுக்கட்டைக்கு நம்பகத்தன்மையை வேரோடு அளிக்கும் அமெரிக்காவின் நிர்பந்தப்படுத்தும் அணுகுமுறையே காரணம்” என்று ஐநா சபையில் அவர் கூறினார்.
“அமெரிக்காவின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை ஏதும் இல்லாமல், எங்களது தேச பாதுகாப்பில் சமரசம் செய்யமுடியாது. இச்சூழ்நிலையில், எங்கள் மீதான தடைகளை விலக்குவதற்கு முன்னரே நாங்கள் ஆயுதங்களை கைவிடுவதென்பது சாத்தியமில்லை.”
“எங்களை பற்றி சரியாக அறியாதவர்கள் வடகொரியாவின் மீது விதிக்கப்படும் தடைகளால் எங்களது செயல்பாட்டை முடக்கிவிடலாம் என்று கனவு காண்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூர் சந்திப்பிற்கு பிறகு என்ன நடந்தது?
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான கூட்டத்தின் முடிவில் வடகொரியா அணுஆயுத கைவிடலை நோக்கி பயணிக்கும் என்ற முடிவு எட்டப்பட்டது. ஆனால், அதற்கான காலவரையரையோ அல்லது அந்த செயல்பாட்டை கண்காணிக்கும் முறையை பற்றியோ எவ்வித தகவலோ வெளியிடப்படவில்லை.
- அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை திருப்பி அனுப்பியது வட கொரியா
- அணு ஆயுத நீக்கப் பேச்சுவார்த்தை: வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்
அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நிலவும் பிரச்சனையின் காரணமாக தனது கூட்டாளியான வடகொரியாவின் அணுஆயுத கைவிடல் செயல்பாட்டை வலுவிழக்க செய்ய சீனா முயற்சித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வட கொரியாவிற்கு சென்றார். கடந்த ஒரு தசாப்தகாலத்தில் வட கொரியாவிற்கு தென் கொரிய தலைவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.
“முழு அணுஆயுத கைவிடலை நோக்கிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் செயல்பாட்டை என்னால் உறுதிசெய்ய முடிந்தது” என்று கூறிய மூன் ஜே-இன், டிரம்பை மீண்டும் சந்தித்து பேச வேண்டுமென்ற தனது எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தியாக அவர் கூறினார்.
வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் மற்றும் பரிசோதனை தளங்களை கண்டிப்பாக கைவிடுவோம் என்று கிம் ஜோங்-உன்னும் உறுதியளித்திருந்தார். மேலும், அமெரிக்கா ஏதாவது பரஸ்பர நடவடிக்கை எடுத்தால்தான் முக்கிய அணுஆயுத பரிசோதனை தளத்தை கைவிட முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வட கொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பிற்கு “வெகு காலம் இல்லை” என்று நம்புவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
-BBC_Tamil