ரோஹிங்கியா இனப் படுகொலை விவகாரம் : ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமை ரத்து

ஒட்டாவா: மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமானது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திட்டமிட்ட இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள்  சபை அறிவித்தது.

இந்தநிலையில்,  இவ்விவகாரத்தில் தலையிட தவறியதற்காக மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-க்கு கடந்த 2007-ம் ஆண்டு  கனடா அளித்த கவுரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் கடந்த சில தினங்களுக்கு முன் கனடா  பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில்,  மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது. இதுபோன்று ஒரு கவுரவ குடியுரிமையை ரத்து செய்வது கனடா வரலாற்றில் இதுவே முதல் முறை.

ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா இன மக்களை திட்டமிட்டு அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை தீவைத்து கொளுத்தியதும் இன அழிப்பு மற்றும் ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவம் குழு கூட்டுப் பலாத்காரம் செய்ததும், ஐ.நா. உண்மை அறியும் குழுவின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.

-dailythanthi.com