24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு – ஆப்கான் ராணுவம் அதிரடி..

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.

-athirvu.in