இந்தோனேஷியாவில் உதவிகள் போதாது என்கிறது ஐ.நா

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, சுனாமி ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 1,400ஐ எட்டியுள்ளது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வனர்த்தத்தில் சிக்கியோரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் மேலும் தெரிவிக்கும் அதேநேரத்தில், அழிவுகளைத் தொடர்ந்து காணப்படும் ஏராளமான தேவைகள், நிறைவேற்றப்படாமல் உள்ளன என, ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் இன்னமும் சிக்கிக் கொண்டுள்ளோரை மீட்பதற்கான இறுதித் தினமாக, வெள்ளிக்கிழமையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன் பின்னர், இவ்வனர்த்தத்தில் சிக்கியோர், உயிருடன் காணப்படுவதற்கான வாய்ப்புகள், கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுலவேசித் தீவில் அதிகம் பாதிக்கப்பட்ட பாலு நகரத்தை, மீட்புப் பணியாளர்கள் இன்னமும் முக்கிய மீட்புப் பகுதியாகக் கருதி, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்நகரத்தில், கடைத்தொகுதி, உணவகம் ஆகியன அமைந்திருந்த பகுதி இடிந்து வீழ்ந்ததில், 60 பேர் வரையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சர்வதேச உதவிகளை, இந்தோனேஷியா ஏற்று வருகின்ற போதிலும், இன்னமும் போதுமான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமை தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம், கிட்டத்தட்ட 200,000 பேர், உடனடி உதவிகள் தேவையானவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிட்டது. அவ்வாறு உடனடி உதவிகள் தேவைப்படுவோரில், ஆயிரக்கணக்கானோர் சிறுவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மீட்புப் பணிகள் தொடர்பாக விமர்சனத்தை வெளிப்படுத்திய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனிதாபிமான அலுவலகம், “மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சில பாரிய நிலப்பரப்புகள், இன்னமும் அடையப்படவில்லை” என்று தெரிவித்தது. ஆனால், மீட்புப் பணியாளர்கள், தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவ்வலுவலகம் குறிப்பிட்டது.

-tamilmirror.lk