அமெரிக்க அதிபராக ஒபாமா பணி புரிந்த போது அணுவாயுத உற்பத்தியைக் கட்டுப் படுத்தும் ஒப்பந்தத்தை ஈரான் கடந்த 2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இதில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்தார்.
மேலும் ஈரான் அரசை நெருக்கடிக்குத் தள்ளும் விதத்தில் அதன் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். இந்த புதிய பொருளாதாரத் தடைகளில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அடிப்படைத் தேவைக்குரிய பொருட்களது ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப் பட்டது. இதனால் கலக்கம் அடைந்த ஈரான் சமீபத்தில் இப்பொருளாதாரத் தடையை எதிர்த்து சர்வதேச நீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி அப்துல்ஹாவி அகமது யூசுப் வியாழக்கிழமை அமெரிக்க அரசின் மீது சில ஆணைகளைப் பிறப்பித்தார்.
அதில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான தடைகளை அமெரிக்க விலக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததடன் விமான பாகங்கள் மீதான தடைகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com