சீன இண்டர்போல் தலைவர் மாயம்! : அதிர்ச்சியில் உலக நாடுகள்

சீனாவில் சர்வதேச போலிஸின் இண்டர்போல் (விசாரணை) படையின் தலைவர் மெங் ஹாங்வெய் திடீரென காணாமற் போயுள்ளார். கடந்த 2016 ஆமாண்டில் தான் இவர் இண்டர்போல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.

64 வயதாகும் சீனக் குடிமகனான இவர் சீன மக்கள் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார்.

பிரான்சில் லயன் பகுதியில் இண்டர்போல் தலைமையகத்தில் வசித்து வந்த இவரது பதவிக் காலம் 2020 இல் முடிவதாக இருந்தது. இதற்கிடையில் செப்டம்பர் 29 ஆம் திகதி சீனா சென்ற பின் இவர் திடீரென காணாமாற் போயுள்ளார். இவரிடம் இருந்து நீண்ட நாட்களாக எந்த விதத் தொடர்பும் கிடைக்காத காரணத்தால் ஹாங்வெய் இன் மனைவி பிரான்ஸ் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது பிரான்ஸ் போலிஸ் இதற்காகத் தனி விசாரணைப் படை அமைத்து விசாரணையை முடுக்கியுள்ளது.

சீனாவில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சிறப்பாகச் செயற்பட்ட இவர் தீவிரவாத எதிர்ப்புப் படையின் முன்னால் தலைவரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலைவருமாகவும் கடமையாற்றியவர் ஆவார். இதன் போது இவரது சிறப்பான பணி காரணமாகவே இண்டர்போல் தலைவராகப் பதவி உயர்வு செய்யப் பட்டார். இந்நிலையில் இவர் சீனாவில் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டிருக்கலாம் அல்லது அரசினால் வேறு ஏதும் காரணத்தால் கைது செய்யப் பட்டிருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.

-4tamilmedia.com