தடுப்பு காவலில் ‘இன்டர்போல்’ தலைவர்

பீஜிங்: மாயமானதாக கூறப்பட்ட, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர், மெங் ஹாங்வே, சீனாவில், தடுப்புக்காவலில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சை தலைமையிடமாக வைத்து, இன்டர்போல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சீனாவைச் சேர்ந்த, மெங் ஹாங்வே செயல்பட்டு வருகிறார். இவர் சீனாவின், மக்கள் பாதுகாப்பு துறை, துணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பிரான்சின் லியான்ஸ் நகரில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் கணவரை, செப்., 29 முதல் காணவில்லை, என, ஹாங்வேயின் மனைவி, பிரான்ஸ் போலீசில் புகார் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாங்வேயை, பிரான்ஸ் போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில், மெங்க் ஹாங்வே, கடந்த மாதம், 29ல், சீனா சென்றதும், அதன் பின் அவரை காணவில்லை எனபதும், தெரிய வந்தது.

இந்நிலையில், சீன நாளிதழ் ஒன்றில், ‘இன்டர்போல் தலைவர், மெங் ஹாங்வேவை,விசாரணைக்காக சீன போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். கடந்த, 29ல், அவர், சீனா வந்தவுடன், ஒழுங்குமுறை அதிகாரிகளால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் எதற்காக, எந்த இடத்தில் விசாரணை நடக்கிறது என்ற விபரம் வெளியாகவில்லை.இது பற்றி, சீன அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

-dinamalar.com