`சே’ குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்

1967. அக்டோபர் ஒன்பதாம் நாள் கெரில்லா படைத்தலைவர் எர்னஸ்டோ “சே” குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத்தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிபிசியின் வில் கிராண்ட். மேலும் சே குவேராவின் மகனாக வாழ்வதில் உள்ள அழுத்தங்கள் குறித்து அவரிடம் பேசினார்.

அந்தச் சமயத்தில் குடும்ப ஒற்றுமைகள் விசித்திரமாக இருந்தது.

சில நாட்கள் சவரம் செய்யாத குருமயிர்க் கற்றைகள், தெளிவான மூக்கு போன்ற ஒற்றுமைகளுடன் இன்னொன்றும் இருந்தது. ‘சே’ வைப்போலவே இவரும் முன்விரல்களுக்கு இடையே எரிந்து கொண்டிருந்த சிகரெட்டை உறுதியாகப் பிடித்தபடி காட்சியளித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் மிகவும் குறிப்பிடத்தக்க புரட்சியாளரான எர்னஸ்டோ ‘சே’ குவாராவின் இளைய மகன், உடல் சார்ந்த குணாதிசயங்களோடு தமது தந்தையின் இன்னொரு குணத்தையும் பெற்றிருந்தார். அது மோட்டார் சைக்கிள் மீதான அவரது காதல்.

கியூபாவில் மோட்டார்சைக்கிளில் எர்னஸ்டோ குவேரா
தனது தந்தையின் மோட்டார் சைக்கிள் பெயரை தனது நிறுவனப் பெயராக வைத்திருக்கும் எர்னெஸ்டோ குவேரா

” எனக்கு எப்போதுமே இயந்திரவியல்,வேகம் , மோட்டார் சைக்கிள், கார் ஆகியவை மிகவும் பிடிக்கும்” என்கிறார் 52 வயது எர்னஸ்டோ. ” நான் குழந்தையாக இருக்கும்போதே எனக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதில் விருப்பம் இருந்தது. ஒருவேளை இது எனது தந்தையிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டதாக இருக்கலாம் ஆனால் அது எவரிடமிருந்து வந்திருந்தாலும் சரி, நான் அதை விரும்புகிறேன்”

இளைய சேகுவாரா அவரது வாழ்வில் மிக வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதாவது சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவர் ஒரு மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயண நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்துக்கும் சேகுவேராவுக்கும் ஒரே ஒரு தொடர்பு தான் இருக்கிறது. அது அந்த நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது.

இளைய சேகுவேராவின் நிறுவனத்தின் பெயர் லா போடிரோசா டூர்ஸ். மோட்டார் சைக்கிள் குறிப்புகள் எனும் பெயரில் தனது பயண நினைவுகள் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார் சேகுவேரா.

அதில் அவர் பயன்படுத்திய 500 சிசி எஞ்சின் திறன் கொண்ட நார்டான் நிறுவனத்தின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிளின் பெயர் ‘லா போடிரோசா’ .

லா போடிரோசா டூர்ஸ் ஒரு தனியார் நிறுவனம். அது அயல்நாட்டு மூலதனத்தை பயன்படுத்தி இயங்குகிறது. இந்நிறுவனம் மாநில கியூப நிறுவனங்களோடு கைகோர்த்து வேலை செய்கிறது.

Presentational grey line
Presentational grey line

கடந்த 2010ல் அதிபர் ரால் கேஸ்ட்ரோவால் கொண்டுவரப்பட்ட விதிமுறை மாற்றங்களினால் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்று இது. வழக்கறிஞராக பயிற்சி செய்துகொண்டிருந்த எர்னஸ்டோ அப்போது செய்து கொண்டிருந்த வேலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுத்தார்.

சேகுவாரா அவரது மனைவி அலீய்டா மார்ச்சுடன் திருமண நாளில்.
சே குவாரா அவரது மனைவி அலீய்டா மார்ச்சுடன் திருமண நாளில்.

நாங்கள் அந்த சமீபத்தியச் சுற்றுப்பயணத்தில் இணைந்தபோது, மேற்கில் இருந்து பயணத்தைத் தொடங்கி புகையிலை வளரும் பகுதியான டெல் ரியோவை நோக்கிச் சென்றோம்.

தீவுகளை பார்ப்பதற்கு சிறந்த வழி என தொடர்ந்து உறுதிசெய்கிறது இந்த மோட்டார் சைக்கிள். அந்தச் சுற்றுப்பயணக்குழுவில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், அர்ஜென்டினா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். நாங்கள் காபி அருந்துவதற்காக வண்டியை நிறுத்தியபோது மாசாசுசெட்சில் இருந்து வந்திருந்த கத்துக்குட்டி மோட்டார் சைக்கிள் பயண ஆர்வலரான ஸ்காட் ராட்ஜெர்ஸ் ”என்னுடைய வயதில் உள்ள அமெரிக்கர்கள் முன்னதாக கியூபாவுக்கு வரவே முடியாது.ஆனால் இப்போது முடிகிறது” என்றார்.

மற்றவர்கள் ‘சே’ வுக்கு நேரடி தொடர்பில் இருந்தனர். அதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த எட்வார்டோ லோபெஸும் அடக்கம். நிச்சயமாக அவரும் அந்த ஈர்ப்பின் ஒரு பகுதியே என்கிறார் எட்வார்டோ.”

மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றுவது எனது விருப்பவேலை ஆனால், நாங்கள் இந்தச் சுற்றுப்பயணத்துக்கு குறிப்பாக வந்திருப்பதற்கு காரணம் என்னுடைய சொந்த ஊரான கொர்டோபாவில் ‘சே’ சில காலம் வசித்தார் என்பதே” என்றார் எட்வார்டோ.

புகழ்பெற்ற குடும்பப்பெயரைக் கொண்டிருந்த போதிலும் தான் ஒரு தனிப்பட்ட மனிதன். சொந்தமாகச் செயல்படக்கூடியவர் என வலியுறுத்துகிறார் எர்னெஸ்ட்டோ.

” நான் எப்போதுமே விஷயங்களை இணைக்க முயற்சி செய்ததில்லை . ஏதாவது நான் சாதித்திருந்தால் அது எர்னெஸ்டோ குவேரா மார்ச் ஆகிய என்னால் ஒரு மனிதனாக செய்து முடிக்கப்பட்டதே” என்கிறார் சேகுவாராவின் இரண்டாவது மனைவியான கியூபா நாட்டைச் சேர்ந்த அலீய்டா மார்ச்சின் மகன்.

” நான் எல்லா விஷயங்களையும் ஒரு பொறுப்போடு செய்கிறேன். அது வேலை செய்தால் சிறந்தது. வேலை செய்யவில்லை எனில் அதற்கான நியாயமானது” என்கிறார் எர்னெஸ்டோ குவேரா மார்ச்.

எர்னஸ்டோ குவேராவுடன் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள்
சில சுற்றுலா பயணிகள் குவேரா வரலாற்றைத் தெரிந்து கொள்ளவே சுற்றுலா வருகிறார்கள்

இதுவரை அவரது வணிக தத்துவம் அவரை சிறப்பாக வழிநடத்தியுள்ளது. கடந்த வருடம் கியூபாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது சாதனையாக இருந்தது கண்கூடாக தெரிந்தது. லா பொடிரோசாவில் வணிகமும் விறுவிறுப்பாக இருந்தது.

அவர் மீது விமர்சனங்கள் இருப்பது பற்றி குறிப்பாக மியாமியில் உள்ளது தொடர்பாக அவர் அறிவார். மார்க்சிய பின்னணியில் பிறந்த அவர் சுற்றுலா துறையில் முதலாளித்துவ கொள்கையுடன் களமிறங்கியிருப்பது அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. அது குறித்து அவர் பெரிதாக கவலைப்படுவதில்லை.

ஹவானா சுவர்களில் சே குவேராவின் படம்ஹவானா சுவர்களில் சே குவேராவின் படம்

சோஷியலிசமா, முதலாளித்துவமா என பார்ப்பதில் ஒன்றுமில்லை என அவர் வாதிட்டபோது அவரது குரலில் ஒரு சீற்றம் இருந்தது. ”அந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் நல்ல வேலையைச் செய்கிறோம் அது எனது நாட்டுக்கு உதவுகிறது ” என்றார் ‘சே’ மகன்.

எங்களது சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக அவரது தந்தையின் கருப்பு பக்கமான கபானா கோட்டைக்கும் சென்றோம். இந்த இடத்தில் தான் புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். புரட்சியால் அகற்றப்பட்ட ராணுவ அரசின் பதவிகளில் இருந்தவர்கள் மீதான விசாரணைக்கு சே தலைமை வகித்தார். அவர்களில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கியூபப் புரட்சியின் விமர்சகர்களால் இந்த சம்பவம் அரைகுறை நீதி என்று விமர்சிக்கப்படுகிறது.

” எதிரிகள் அவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கியூபா மக்களுக்கு ஏன் அப்படி நடந்தது, எப்படி அவை நடைபெற்றது என தெரியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கியூபாவில் உள்ள அனைத்து சமூகத்திடையே அமைதியை ஏற்படுத்த அவர்கள் அவ்வகையான கொலைகாரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. ஆதலால் நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். என்னுடைய ஆன்மா அமைதியில் திளைத்திருக்கிறது எனது தந்தையின் ஆன்மாவும் தான்” எனச் சொல்கிறார் சேகுவாராவின் இளைய மகன்.

ஒரு பிரபலமான தந்தைக்கு, அவரில்லாமல் மகனாக வளர்வது அவ்வளவு எளிதல்ல என ஒப்புக்கொள்கிறார் எர்னஸ்டோ. 1967ல் போலியாவியாவில் சே குவேரா கொல்லப்பட்டபோது எர்னஸ்டோவுக்கு வயது வெறும் இரண்டு.

”நிச்சயமாக பள்ளிகளில் நீங்கள் எர்னஸ்டோ குவேரா என சுட்டிக்காட்டப்படுவீர்கள். ஆனால் பொதுவாக ‘எர்னஸ்டோ குவேரா மார்ச்’ என அறியப்படுவேன். அதுதான் நான்” என்கிறார் அவர்.

அவரது வசீகரமான தந்தை மீதான ஆர்வம் உலகம் முழுவதும் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்த ஒரு புள்ளியை இளைய எர்னெஸ்டோ வலியுறுத்துகிறார்.

” என் மீது அன்பு செலுத்துபவர்கள் நான் என்னவாக இருக்கிறேனோ அதற்கு அன்பு செலுத்தவேண்டும். குவேரா என்ற பெயருக்காக மட்டும் அன்பு செலுத்தவேண்டாம்” என்கிறார் அவர். -BBC_Tamil