‘வடகொரியாவுக்குள் சர்வதேச கண்காணிப்பாளர்’

வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைத் தளங்களுக்குள்ளும் ஏவுகணைச் சோதனைத் தளங்களுக்குள்ளும், சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதற்கு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் சம்மதித்துள்ளார் என, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, நேற்று (07) தெரிவித்தார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் வைத்துக் கருத்துத் தெரிவித்த அவர், அதற்கான ஏற்பாடு குறித்து, இரண்டு தரப்புகளும் சம்மதித்த பின்னர், சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு செல்வர் எனக் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள ஏற்பாடுகளின் படி, புங்கியே-றி

பகுதியிலுள்ள பிரதான அணுவாயுதச் சோதனைத் தளமும், அதேபோல், ஏவுகணைச் சோதனைக்கான இன்னொரு தளமுமே, கண்காணிப்பாளர்களால் பார்வையிடப்படவுள்ளது.

வடகொரியாவின் சோதனைத் தளங்களில், சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிப்பது என்பது, கொரியத் தீபகற்பத்திலிருந்து அணுவாயுதமழிப்புத் தொடர்பான உறுதிமொழிகளில், அதிகம் சவாலுக்குரிய விடயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. எனவே, அவ்விடயத்தில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றமை, முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, இராஜாங்கச் செயலாளருடனான சந்திப்புத் தொடர்பில் நேற்றுச் செய்தி வெளியிட்ட வடகொரிய அரச ஊடகம், இச்சந்திப்பு வெற்றிகரமானதாக அமைந்தது என்று குறிப்பிட்டது. அத்தோடு, மைக் பொம்பயோவுடனான சந்திப்புத் தொடர்பில் அவர், முழுமையான திருப்தியை வெளிப்படுத்தினார் எனவும், அவ்வூடகம் குறிப்பிட்டது.

-tamilmirror.lk