சமீபத்தில் சோயுஸ் ராக்கெட்டு மூலம் கஜகஸ்தான் ஏவு தளத்தில் இருந்து இரு விண்வெளி வீரர்களுடன் பூமியைச் சுற்றி வரும் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஏவப்பட்ட விண்கலம் நடுவானில் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பத்திரமாகத் திருப்பி பூமிக்கு இறக்கப் பட்டுள்ளது.
இந்த சோயுஸ் ராக்கெட்டு ஏவப்பட்டு சில நிமிடங்களில் பூஸ்டர் பிரச்சினை காரணமாகவே பூமிக்குத் திருப்பப் பட்டுள்ளது. மேலும் பூமியில் இறக்கப் பட்ட விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக நாசா உறுதிப் படுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, பிரேசில், இத்தாலி உட்பட சுமார் 13 நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே அமைத்த மிகப் பெரிய செய்மதியான சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் (ISS) பூமியில் இருந்து 418 Km உயரத்தில் பூமியின் தாழ் ஒழுக்கில் அதனைச் சுற்றி வருகின்றது. இதன் சீர்திருத்தப் பணி மற்றும் ஆய்வுப் பணிக்காக 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் செல்வதும் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுத் திரும்பி வருவதும் வழக்கம்.
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் விண்ணில் உயிர் வாழ்க்கை சாத்தியமா என்பது குறித்த ஆய்வுகளும், சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகளும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் மட்டுமன்றி பிற நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் மற்றும் தனியார் ஆய்வு மையங்களாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com