எம்டியூசி பக்காத்தானுடன் உடன்பாடு செய்து கொள்ள முன்வருகிறது

நாடாளுமன்றத்தில் வேலைச் சட்டத் திருத்தங்களை பக்காத்தான் ராக்யாட் நிராகரிக்குமானால் அதற்கு ஈடாக தேர்தல் ஆதரவு வழங்க எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் முன்வந்துள்ளது.

ஜோகூர் பூலாயில் நிகழும் பிகேஆர் பொதுப் பேரவையில் நிருபர்களிடம் பேசிய எம்டியூசி பொருளாளர் அலியாஸ் அவாங், அந்தத் தகவலை வெளியிட்டார்.

ஆதரவு தெரிவிப்பதைக் குறிக்கும் புரிந்துணர்வுப் பத்திரத்தில் பக்காத்தான் எம்டியூசி-யுடன் கையெழுத்திட வேண்டும் என அவர் சொன்னார்.

தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பேசிய அவர் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி சிலாங்கூர் எம்டியூசி கூட்டத்தில் அந்தப் புரிந்துணர்வுப் பத்திரம் சமர்பிக்கப்படும் என்றார்.

“நான் அந்தக் கூட்டத்தில் தீர்மானத்தை சமர்பிப்பேன். நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு அந்த பத்திரம் கையெழுத்திடப்படுவது அவசியமாகும். நீங்கள் எனக்கு உதவுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்,” என அவர் சொன்னார்.

அந்தச் சொற்றொடரைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிபு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிக்கடி பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொடூரமான அரசாங்கத்தின்” (kerajaan haram jadah) மீது “போர்” பிரகடனம் செய்த அவர், அந்தச் சட்டத்துக்கான திருத்தங்களை தடுப்பதில் வெற்றி பெறும் எந்தக் கட்சிக்கும் எம்டியூசி ஆதரவளிக்கும் என்றார் அவர்.

வாக்காளர்களில் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். மொத்த வாக்காளர்களில் ஐந்து மில்லியன் பேர் தொழிலாளர்கள் என்றார் அவர். எம்டியூசி 800,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஆதரவு இல்லாமல் போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் திசை மாறிவிடுவர் என நான் அஞ்சுகிறேன்,”  என அலியாஸ் அவாங் குறிப்பிட்டார்.

TAGS: