செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார்.
“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து “உண்மையை” தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.
இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது “வழக்கமான ஒன்றாக மாறிவிடும்” என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குண்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
தூதரகம் சென்ற ஜமால்
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் “பொய்” என செளதி அரசு தெரிவித்துள்ளது.
- சௌதி: பெண்களே இல்லாமல் நடந்த பெண்களுக்கான ‘ஃபேஷன் ஷோ’
- சௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்?
மேலும் பத்திரிகையாளர் ஜமால் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக செளதி கூறுகிறது.
செளதியின் உள்துறை அமைச்சரும், இளவரசருமான அப்துலாசிஸ்-பின்-செளத்-பின் நயிஃப் -பின்-அப்துலாசிஸ், தங்களது அரசாங்கமும் முழு உண்மையைக் கண்டறிவதில் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் பத்திரிகையாளரைக் கொல்ல ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் அற்றவை என்றும் செளதியின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறார் அண்டான்யு குண்டாரிஷ்?
“என்ன நடந்தது என்பதும், இதற்கு யார் பொறுப்பு என்பதும் எங்களுக்கு தெரிய வேண்டும்.” என பிபிசி செய்தியாளர் கமல் அகமதிடம் அண்டான்யு குண்டாரிஷ் தெரிவித்தார்.
“இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் தலைநகர் ரியாதில், முதலீகள் குறித்த முக்கிய மாநாடு ஒன்றை நடத்துகிறது செளதி அரேபியா.
“என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான பதில் கூறிய பிறகு பிற நாடுகள் அதில் கலந்து கொள்வது குறித்து முறையான வழியில் முடிகளை எடுக்கும் என குண்டாரிஷ் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் என்ன நடக்கும்?
அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷின், இந்த சம்பவம் குறித்த தகவல்களை எதிர்பார்ப்பதாகவும், என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கசோஜி மற்றும் குடும்பம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
- ஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”
இருப்பினும் இந்த மாதம் 23ஆம் தேதியன்று நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள போவதாக அவர் தெரிவித்தார்.
உலக வங்கியின் தலைவர் ஜும் கிம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து வரும் செய்திகள் தன்னை “திடுக்கிடச்” செய்ததாகவும், தெரிவித்த அவர் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
விர்ஜின் விண்வெளி நிறுவனங்களில் செய்கின்ற ஒரு பில்லியன் சௌதி முதலீடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொழிலதிபர் சர் ரிச்சர்டு பிரான்சன் நிறுத்திவிட்டார்.
செளதி அரசுடம் நல்லுறவு ஏற்படுத்த முயன்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உண்மையை வெளிக்கொண்டுவருவதாக உறுதி கூறியுள்ளார்.
செளதி அரேபியாவின் அரசர் சல்மானுடன் துருக்கியில் நிலவும் மோசமான சூழல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்தார் என ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
காணொளி சான்றுகள்
இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் இருப்பதை துருக்கி பாதுகாப்பு வட்டாரம் ஒன்று பிபிசி அரபி சேவையிடம் உறுதி செய்துள்ளது.
துருக்கி அதிகாரிகள் தவிர வேறு யாராவது இந்த சான்றுகளான ஒலிப்பதிவை கேட்டுள்ளனரா, காணொளியை பார்த்துள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.
- இரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் இந்தியா
- இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?
கசோஜியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோஜி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.
கசோஜி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்,
ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.
பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது.
கறுப்பு வேன் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.
செளதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.
யார் இந்த ஜமால்?
சரி. யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்?
- ‘என் மகன் மிகவும் நல்லவன்’ – ஒசாமா பின்லேடனின் தாய்
- சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர். பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆஃ ப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.
ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980-1990 காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார். -BBC_Tamil