காணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை.
துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி.
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து செளதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார். இந்த சூழலில் அவர் அக்டோபர் 2ஆம் தேதி காணாமல் போனார்.
டிரம்ப் எச்சரிக்கை
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
“அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்றும் கூறி இருந்தார்.
“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்றும் விவரித்திருந்தார்.
- ஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”
- மாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, பிரிட்டன் யோசனை
இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து “உண்மையை” தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தி இருந்தார்.
பிரிட்டன், பிரான்ஸ் மற்று ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஜமால் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பொறுப்பாக்கும் நம்பகமான விசாரணையை கோரி இருந்தனர்.
அவர்கள், “செளதி – துருக்கியின் கூட்டு முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். செளதி அரசு முழுமையான மற்றும் விரிவான பதிலளிக்குமென நாங்கள் நம்புகிறோம்,” என கூறி உள்ளனர்.
புறக்கணிப்பு
இதனிடையே செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
கசோஜி மாயமானது குறித்து கவலை தெரிவித்து பல ஊடக குழுக்கள் செளதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
- ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
- சௌதி பத்திரிகையாளர் காணாமல் போன விவகாரம்: துருக்கி வந்ததா சௌதி உளவுக் குழு?
அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷ், மற்றும் பிரிட்டனின் சர்வதேச வர்த்தகச் செயலர் லியம் ஃபாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போகலாம் என ராஜாங்க செய்தி வட்டாரங்கள் பிபிசியின் செய்தியாளர் ஜேம்ஸ் லாண்டலேயிடன் தெரிவித்துள்ளனர்.
செளதி கூறுவதென்ன?
அச்சுறுத்தல், பொருளாதார தடைகள் அல்லது அரசியல் அழுத்தங்கள் மூலமாக எங்களை சிறுமைப்படுத்தும் முயற்சிகளை மறுப்பதில் செளதி அரசு இன்னும் உறுதியாக இருக்கிறது என செளதி அரசு செய்தி முகமை கூறுகிறது.
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனைவிட பெரிதாக பதில் நடவடிக்கை எடுக்கும். உலக பொருளாதாரத்தில் செளதி வியத்தகு பங்கை வகிக்கிறது என செளதி அரசு கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது. -BBC_Tamil