பிஎன்னைத் தோற்கடிக்க பக்காத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்

“நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும்.நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.” 

 

 

வெற்றிபெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது

மஞ்சிட் பாட்யா: பணி ஓய்வுபெற்றவரான இங் சாக் இங்கூன், அம்னோ/பிஎன் வெற்றிபெறும் நோக்கத்திற்காக தேர்தல் ஆணையம்(இசி) செய்துள்ள தொகுதிப் பிரிப்பை அம்பலப்படுத்தியதன் மூலம் நல்லதொரு பணியைச் செய்துள்ளார்.

தொகுதிகள் பொருத்தமற்ற முறையில் பிரிக்கப்படுவது மலேசிய அரசியலில் புதிய செய்தி அல்ல. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும்கூட அப்படி நடப்பது உண்டு.

ஆனால், மேலை நாடுகளில் உள்ளதுபோல் அல்லாமல் மலேசியாவில் இசி, அம்னோவின் கையாள்போல வேலை செயலபடுகிறது. வெற்றிபெறும் நோக்கில் தொகுதிகளைப் பிரிக்கும் நடவடிக்கை 1960களின் முற்பகுதியில் மோசமாக இருந்தது. 1969-இல் மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக 2008-க்குப் பிறகு, அம்னோ/பின் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதால் சாதகமான முறையிலே தொகுதிகளைப் பிரிப்பது போன்ற  தில்லுமுள்ளுகள் பெருகி விட்டன.

இந்நிலை மாற வேண்டும்.மாறவில்லை என்றால் பெர்சே 3.0-ஐத் தொடங்க வேண்டியதுதான்.

பெயரிலி_4031: மலேசியாவின் 222 தேர்தல் தொகுதிகள் பற்றித் தகவல் தந்த இங் சாக் இங்கூனுக்கு நன்றி. அவை அதிர்ச்சிதரும் தகவல்கள்.

வெற்றி நோக்கிற்காக தொகுதிகளைப் பிரிப்பது ஓர் ஏமாற்றுச் செயல்.சாபாவில் இது மட்டுமல்ல. ப்ரோஜெக்ட் ஐசி-யும் சேர்ந்துகொண்டது.

12 பொதுத் தேர்தல்கள் நடந்து முடித்துவிட்டன. இதுவரை இசி தலைவர் என்ன செய்துகொண்டிருந்தார். தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க பிஎஸ்சி தலைவர் மெக்சிமஸ் ஒங்கிலி, துணிச்சலுடன் மாற்றத்தைக் கொண்டுவர முனைவாரா?

பிபிஎஸ், உப்கோ, பிபிஆர்எஸ், எல்டிபி ஆகியவை பின்னைவிட்டு விலகி சாபா, சரவாக்கிற்குப் பெருனை தேடித் தருவார்களா?

இவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் ப்ரோஜெக்ட் ஐசி பற்றிப் பேசுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

உள்ளுக்குள்ளேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் பாருங்கள், முடியவில்லையா, வெளியில் வாருங்கள்.இந்த ஏமாற்று வேலைக்கு தீர்க்கமாக முடிவு காணப்பட வேண்டும்.

மந்திர மலை: இவ்வளவு காலம் பிஎன் ஆட்சியில் இருந்தது எப்படி? இவைதாம் காரணங்கள்:-

1.வெற்றிபெறும் நோக்கில் தொகுதிகள் பிரித்தல் 2. அந்நியர்களுக்கு அடையாளக் கார்ட் கொடுத்து வாக்காளராக்குதல்;
3.ஊடகங்களை நியாயமற்ற முறையில் கட்டுப்படுத்தி வைத்தல்;
4. தேர்தல் பரப்புரைக்கு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துதல்;
5.பண அரசியல்;
6.சட்டங்களைப் பயன்படுத்தி மாற்றரசுக் கட்சிகளை ஒடுக்குதல்;
7. போலீசைப் பயன்படுத்தி மிரட்டுதல்;
8.அஞ்சல் வாக்குகள்- இல்லாத இராணுவத்தினரின் பெயர்களில் வாக்களித்தல்;
9.பரப்புரைக் காலத்தைச் சுருக்குதல்;
10.சமய, இன விவகாரங்களைத் தூண்டிவிட்டு அச்ச உணர்வை ஏற்படுத்தல்;
11.வெளிநாடுகளில் உள்ள மலேசியருக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்தல்;
12.தவறுகள் மலிந்த, காலத்துக்கு ஒவ்வாத வாக்காளர் பட்டியல்

டெல்: புத்ராஜெயாவில் யார் ஆட்சியில் இருந்தாலும் கவலையில்லை. ஆனால், அவர்கள் சரியாக செயல்படுவர்களாக இருத்தல். இப்போதுள்ள நிர்வாகம் எப்படி?அதில் உள்ள அரசியல்வாதிகள் நல்லவர்கள். ஆனால், அவர்கள் நல்ல கொள்கைகளை உருவாக்குபவர்கள் அல்லர்(எவ்வளவு குளறுபடிகளைச் செய்திருக்கிறார்கள்).

நான் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளரோ நஜிப்பின் ஆதரவாளரோ அல்லர். நல்ல அரசாங்கம் எதுவோ அதை ஆதரிப்பவன்.

இந்த இரண்டு தரப்புகளையும் தவிர்த்து மூன்றாவதாக ஒன்றுமில்லை. எனவே, பிகேஆருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம்-அவர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அடுத்துவரும் தேர்தலில் அவர்களைத் தூக்கி வீசுவோம்.

நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும். நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.

கேஎஸ்என்: சுயேச்சையாக செயல்பட வேண்டிய இசி, அம்னோ சொல்படி நடந்து வந்துள்ளது.

இனி, பக்காத்தான் என்ன செய்யப்போகிறது? சட்டப்பூர்வமாக இதற்குத் தீர்வு காண முடியுமா? பக்காத்தான் மலேசியர் அனைவருக்கும் இத்தகவலைக் கொண்டு செல்லுமா?

இப்பழக்கம், தேர்தலின் நோக்கத்தையே குழிதோண்டிப் புதைக்கிறது. பிஎஸ்சி (நாடாளுமன்றத் தேர்வுக்குழு) இசியை இதற்குப் பொறுப்பாக்கி விசாரிக்க வேண்டும்.

அலென் கோ: 7 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட புத்ரா ஜெயாவுக்கு ஒரு எம்பி. 112,000 வாக்காளர்களைக் கொண்ட காப்பாருக்கும் ஒரு எம்பி.

இது என்ன நியாயம்?இதுதானா சமமான ஆடுகளம்?. இது போதாதென்று ஆவி வாக்காளர்கள், அஞ்சல் வாக்காளர்கள் வேறு. இதற்குத் தேர்தலே நடத்தாமல் இருப்பது மேல்.

TAGS: