செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செளதி அரசர் சல்மானுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசோஜிக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என செளதி அரசர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உடனடியாக செளதி அரேபியா செல்லவுள்ளார்.
செளதி தூதரகத்தின் உள்ளே முதல்முறையாக துருக்கி போலீசார் சென்றுள்ளனர். இங்குதான் கடைசியாக கசோஜி பார்க்கப்பட்டுள்ளார்.
இந்த கட்டடத்தில் செளதி அதிகாரிகள் முதலில் நுழைந்தனர். பின்னர் துருக்கி போலீசாரும் அவர்களை பின்தொடர்ந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், தூதரகத்தில் ஜமால் கசோஜி செளதியை சேர்ந்த நபர்களால் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால், இதனை செளதி அரேபியா மிகவும் கடுமையாக மறுத்துள்ளது.
முன்னதாக, செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
“அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
- ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
- ஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”
“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து “உண்மையை” தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.
இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது “வழக்கமான ஒன்றாக மாறிவிடும்” என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குட்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்த ஜமால், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆஃ ப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை. -BBC_Tamil