பாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்

பாகிஸ்தானில், இந்த ஆண்டு ஜனவரியில், ஆறு வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

ஜைனப் அன்சாரி எனும் அந்த சிறுமியின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டறியப்பட்டபின் கைது செய்யப்பட்ட இம்ரான் அலி எனும் நபர், லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது ஜைனபின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் அங்கு இருந்தனர்.

இம்ரான் அலி தூக்கிலிடப்படும் காட்சியை நேரில் பார்த்ததாகக் கூறிய ஜைனபின் தந்தை அமீன் அன்சாரி, அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

Zainab Ansari

பொதுமக்கள் முன்பு இம்ரான் அலியை தூக்கிலிட வேண்டும் என்று அமீன் தாக்கல் செய்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நாட்டையே உலுக்கிய வழக்கு

ஜனவரி 4-ம் தேதி காணாமல் போன ஜைனப் அன்சாரியின் உடல், ஜனவரி 9 அன்று லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது. அம்மாதம் 23ஆம் தேதி இம்ரான் அலி கைது செய்யப்பட்டார்.

சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டது பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. அந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.

ஜைனப் மட்டுமல்லாது, இச்சம்பவத்துக்கு முன்பே, ஓராண்டுக்கும் மேலாக அந்த நகரில் பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குற்றச் சம்பவங்களிலும் இம்ரான் அலிக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகளும் முதலமைச்சரும் அப்போது தெரிவித்திருந்தனர்.

ஜைனப்
இம்ரான் அலியால் ஜைனப் கடத்தி செல்லப்படுவதைக் காட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி

ஜைனப்பின் உடல் கண்டெடுக்கப்படும் வரை, அவர் காணாமல் போன 5 நாட்களாக தாங்கள் அளித்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஜைனப் கடத்தப்படும் காட்சிகள் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஜைனப்பின் உறவினர்களே சேகரித்து காவல் துறைக்கு வழங்கினர்.

-BBC_Tamil