மோசமான வறட்சி ஆப்கானிஸ்தானில் பலரின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக சிதைத்திருக்கிறது, குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களைவிட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் அதிகம். பல ஆண்டுகால மோசமான யுத்தத்தை வறட்சி வென்றிருக்கிறது.
வறட்சி இம்மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார் பிபிசி செய்தியாளர் செகுண்டர் கெர்மேனி.
ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் ஒன்றான ஹிராத் சென்றுள்ள அவர், அங்கு தற்போது நிலவும் நிலைமை குறித்த செய்திகளை வழங்குகிறார்.
எங்கும் பசி, பட்டினி
ஷதி முஹம்மதுக்கு எழுபது வயதாகிறது. கண்கள் குளமாகி நிற்கிறார். ஹிராத் புறநகரில் உள்ள முகாமில், அவரும் அவர் குடும்பமும் தங்கி இருக்கிறது.
“நாங்கள் பசியில், தாகத்தில் இருக்கிறோம். எங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயரும் போது எங்களால் முடிந்ததை எடுத்து வந்தோம். ஆனால், அதிலும் பலவற்றை வரும் வழியிலேயே இழந்துவிட்டோம். எங்களிடம் இப்போது எதுவும் இல்லை. எட்டு பேர் இந்த சிறிய முகாமில் இப்போது வசிக்கிறோம்” என்கிறார் முஹம்மது.
- சபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின் ‘கைகூடாத கனவு’
- சிலை கடத்தல்: ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண் திருடப்பட்டதா? – விளக்கும் கவிதா
“என் மனைவியும், சகோதரரும் மரணித்துவிட்டார்கள்.” என்று கண்ணீருடன் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார் அவர்.
இரண்டு லட்சம் பேர்
வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் வறட்சியின் காரணமாக ஏறத்தாழ 260,000 பேர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஷதி முஹம்மதும் அவர்களில் ஒருவர்.
சர்வதேச படைகள் போர் நடவடிக்கையை நிறுத்தியதும், 2014 ஆம் ஆண்டுக்குப் பின் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் உயர்ந்துள்ளன. இதனால் துயருரும் மக்களின் வாழ்வில் இந்த வறட்சியும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
2001 ஆம் அண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கனில் ஊடுருவி, தாலிபன்வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றியது. இந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மீண்டும் தலிபான் வசம் பல பகுதிகள் சென்றிருக்கின்றன.
அரசுக்கும் தலிபான்களுக்கும் ஏற்பட்ட போரால் இடம்பெயர்ந்தவர்களைவிட இந்த வறட்சியின் காரணமாக பலர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்கிறது ஐ.நா அறிக்கை.
- தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் – காரணம் என்ன?
- “இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்”
உணவு வேண்டும்
ஐ.நா சர்வதேச உணவு திட்டத்தை சேர்ந்த காதிர் அசெமி நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
ஹிராத் மாகாணத்தில் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்.
அவர், “பேரழிவின் அளவு அச்சமூட்டுவதாக உள்ளது.” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட 2.2 மில்லியன் மக்களுக்கு உதவ 34.6 மில்லயன் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.
தற்சமயம் உணவு வாங்குவதற்காக நிதி வழங்குகிறது ஐ.நாவின் ஐ.நா சர்வதேச உணவு திட்டம்.
இதில் தங்கள் பெயரை பதிந்துக் கொள்ள துயருடன் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள்.
நான்கு குழந்தைகளுடன் வரிசையில் காத்திருக்கும் ஒரு பெண் வடக்கு மாகாணமான ஃபர்யாபிலிருந்து வந்ததாக சொல்கிறார்.
எங்களிடம் கொஞ்சம் பணம் இருந்திருந்தால், நாங்கள் இங்கே வந்திருக்க மாட்டோம். என் திரதிருஷ்டம் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது என்கிறார் அவர்.
மேலும் அவர், “ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு சொட்டு மழை இல்லை. பருக கூட தண்ணீர் இல்லை. எங்களு குழந்தைகளுக்கு அருந்த நாங்கள் என்ன தருவது?” என்கிறார்.
எங்களை கைவிட்டுவிட்டார்கள்
அரசியல்வாதிகளும் தங்களை கைவிட்டுவிட்டார்கள் என்கிறார்கள் ஆப்கன் மக்கள்.
நாடாளுமன்ற தேர்தலும் அக்டோபர் 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
ஆப்கன் மக்கள் வாழ்வாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வறட்சியான ஊழல் காரணமாக உணவுக்காக தங்கள் கால்நடைகளையும் விற்பதாக கூறுகிறார்கள் ஆப்கன் மக்கள். -BBC_Tamil