மாயமான விவகாரத்தில் அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் இதழில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்தார். இரு வாரங்களுக்கு முன் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துாதரகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
சவுதியே காரணம் :
இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டுள்ளது. ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டார் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் கூறியது. ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் சவுதி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் சவுதியை கடுமையாக விமர்சித்துள்ளன.
குற்றச்சாட்டுகளை மறுத்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியது. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சவுதி அரசரிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சவுதிக்கு அனுப்பி வைத்தார். அதே நாளில் அமெரிக்காவிற்கு 700 கோடி ரூபாயை சவுதி அரேபியா வழங்கியது.
சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா கூறிவந்தாலும், ஜமால் பிரச்னையை ஆறப்போடுவதற்காகவே வழங்கப்பட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
சித்ரவதை செய்து கொலை:
ஜமால் கொலை குறித்து துருக்கி அரசு இதழான யேனி சபாக்கில் வெளியான செய்தி: சவுதி துாதரகத்தின் உள்ளே வந்த ஜமால் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். விரல்களை துண்டித்து 7 நிமிடங்கள் வரை இந்த சித்ரவதை நீண்டுள்ளது. பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா துாதர் முன்னிலையில் இத்தனையும் நடந்துள்ளது. கொலையை வெளியே சென்று செய்யுமாறு துாதர் கூறுகிறார். மற்றொரு நபர் அவரை மிரட்டுகிறார். நாங்கள் கைப்பற்றியுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளன, என தெரிவித்துள்ளது.
-dinamalar.com