சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் காஷொகி காணமல் போனமை தொடர்பில், நட்புறவு நாடான சவூதி அரேபியாவை கைவிட விரும்பவில்லை என நேற்று முன்தினம் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஷொகி சவூதி முகவர்களால் கொல்லப்பட்டதை குறிப்புணர்த்துகின்றன என துருக்கி தகவல் மூலங்கள் தெரிவித்த ஒலிப்பதிவுகளையும் கோரியுள்ளார்.
இதேவேளை, கஷொகியின் நிலை தொடர்பான உண்மையை சில நாட்களில் அறிந்து கொள்ள எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஒலி அல்லது காணொலி ஆதாரங்களை ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் அல்லது ஐரோப்பிய நட்புறவு நாடுகளுடன் துருக்கி பகரவில்லை என ஐக்கிய அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமது தகவல் மூலங்கள், முறைகள் மூலம் ஐக்கிய அமெரிக்காவுன் அதன் நட்புறவு நாடுகளும் சில புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் அது ஒலிப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்ட செய்திகளை பகுதியளவில் உறுதிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒலிப் பதிவுகளிலிருந்தான தகவல்கள் எனத் தெரிவித்து துருக்கியின் அரசாங்க சார்பு பத்திரிகையான யெனி சபாக் பிரசுரித்துள்ளமை, காஷொகியின் சித்திரவதை, விசாரணையை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ள நிலையில், குறித்த தகவல்களை சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் உறுதிப்படுத்துவதாக தமது அறிக்கையொன்றில் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், காஷொகியின் விடயம் குறித்து சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, எந்தவொரு விடயத்தையும் பற்றி தான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லையென்றும் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதை சவூதி அரேபியா விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்தவகையில், காஷொகியின் விடயத்தில் ஐக்கிய அமெரிக்கா முடிவெடுப்பதில் சவூதி அரேபியா தாக்கம் செலுத்துகின்றதென்பது கண்கூடாகத் தெரிகின்ற நிலையில், சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பொம்பயோ சவூதி அரேபியாவுக்குச் செல்லும்போது சவூதி அரேபியா வைப்பிலிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதுவர் மொஹமட் அல்-ஒடைபியின் வசிப்பிடத்திலும் இரண்டாவது தடவையாக இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்திலும் நேற்று முன்தினம் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இஸ்தான்புல்லிலிருந்து சவூதி அரேபியத் தலைநகர் றியாத்துக்கு அல்-ஒடைபி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்றிருந்தபோதும் அவர் நாடுகடத்தப்படவில்லையென்றும் சுய விருப்பின் பெயரிலேயே வெளியேறியதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஷொகியின் விரல்கள் துண்டிக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, உடல்கள் துண்டாக்கப்படுவதாக யெனி சபாக் தெரிவித்துள்ளதுக்கு மேலாக, காஷொகியின் சித்திரவைதையின்போது, “இதை வெளியில் செய்யுங்கள். என்னை சிக்கலில் மாட்டி விடப் போகின்றீர்கள்” என ஒடைபி கூறுவது கேட்கக்கூடியதாக இருந்ததாகவும் “நீ சவூதி அரேபியாவுக்கு திரும்போது வாழ விரும்பினால் அமைதியாக இரு” என அடையாளந் தெரியாத நபரொருவர் ஒடைபிக்கு கூறுவதாகவும் இருந்துள்ளது.
இந்நிலையில், காஷொகியின் இறுதிக் கட்டுரை என வொஷிங்டன் போஸ்ட் ஏற்றுக் கொண்டுள்ள அரேபிய உலகில் சுதந்திர ஊடகம் என்ற கட்டுரையை நேற்று முன்தினம் பிரசுரித்துள்ளது.
-tamilmirror.lk